

கோயம்பேட்டில் பல்வேறு வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டப்படும் என அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு வியாழக்கிழமை பதிலளித்து பேசிய அமைச்சர் வைத்திலிங்கம், சில புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவர் கூறியதாவது:
மக்களின் நலன் கருதியும், வியாபாரிகளின் நலன் கருதியும் கோயம்பேடு மொத்த விற்பனை உணவு தானிய அங்காடி வளாக வணிக பகுதியில் கடைகள், உணவகம், வங்கி, அலுவலக உபயோகம், ஏடிஎம் உள்ளிட்ட வசதிகளுடன் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக வணிக வளாகம் கட்டப்படும்.
மேலும், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வணிக வளாகத்தில் ரூ.3 கோடியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் சேமிப்பு கிடங்கு கட்டிடமும் கட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.