விறகுக்கான செலவினத்தை கொடுத்து சிலிண்டரில் சமைக்க கட்டாயப்படுத்தினால் எப்படி? - குமுறும் சத்துணவு அமைப்பாளர்கள்

400 மாணவர்களைக் கொண்ட அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில், தங்கள் சொந்த பணத்தை கூடுதலாக போட்டு, கேஸ் சிலிண்டரைக் கொண்டு சமைக்கின்றனர்.
400 மாணவர்களைக் கொண்ட அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில், தங்கள் சொந்த பணத்தை கூடுதலாக போட்டு, கேஸ் சிலிண்டரைக் கொண்டு சமைக்கின்றனர்.
Updated on
1 min read

விருத்தாசலம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 115 கிராமும், 11 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 165 கிராமும் சத்துணவு வழங்கப்படுகிறது.

‘சத்துணவு மையங்களின் சமையல் கூடத்தில் மாணவர்களுக்கான உணவு சமைக்கும் போது, திறந்த வெளியிலோ அல்லது சமையல் கூடத்திலோ விறகைப் பயன்படுத்தி சமைக்கக் கூடாது.

சிலிண்டரை பயன்படுத்தி தான் சமைக்க வேண்டும்’ என அந்தந்த வட்டார சத்துணவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்ப்பந்தப் படுத்துவதாக புகார் கூறும் சத்துணவு அமைப்பாளர்கள், ‘விறகுக்கான செலவினத்தைக் கொடுத்துவிட்டு, சிலிண்டரில் சமையுங்கள் என்று கூறினால் எப்படி?’ என கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரு சிலிண்டரின் இன்றைய விலை ரூ.1080. 400 மாணவர்களைக் கொண்ட மையத்திற்கு மாதம் 3 சிலிண்டர்கள் தேவைப்படும் நிலை யில், விறகுக்கான தொகையாக ரூ.600-க்கும் குறைவாக வழங்கிவிட்டு ரூ.3,240 செலவு செய்ய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். சத்துணவு அமைப்பாளர்கள் தங்களது கையை விட்டு இந்த தொகையை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

சமையல் பாத்திரங்கள் கூட முறையாக வழங்காமல், ஆய்வுக்கு வரும் ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் போன்றவர்கள், ‘ஏன் விறகில் சமைக்கிறீர்கள்? பாத்திரம் ஏன் இப்படி கரியாக இருக்கிறது?’ என கேள்வி எழுப்பி, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்றனர். இது எங்களுக்கு மிகுந்த கஷ்டமாக உள்ளது என்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள சத்துணவு மேலாளர்கள் கடும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சத்துணவு அமைப்பாளர்களின் ஆதங்கம் குறித்து கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கேட்டபோது, “இந்த நடைமுறை சிக்கல் உள்ளது என்பது உண்மை தான். விறகுக்கு பதிலாக சிலிண்டருக்கான தொகை வழங்குவது குறித்து சமூக நலத்துறைக்கு பரிந்துரைத்திருக்கிறோம். அடுத்த மாதம் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in