

சட்ட விரோத பண பரிவர்த்தனை மேற்கொண்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் ரூ.33.74 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு களுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் தடை விதித்தது.
தடை விதிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக 500 மற்றும் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகளுக்கும் தட்டுப்பாடு நிலவியது.
இந்த ரூபாய் நோட்டுகளை தொழில் அதிபர்கள் பலர் பதுக்கி வைத்திருப்பதாகவும், சட்ட விரோதமாக சிலர் பழைய பணத்தை புதுப் பணமாக கமிஷன் அடிப்படையில் மாற்று வதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் இந்தியா முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் வசித்து வந்த தொழில் அதிபரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரு மான சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவல கங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், சுமார் ரூ.147 கோடி, 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் ரூ.34 கோடி புதிய ரூபாய் நோட்டுகள்.
இதையடுத்து, சேகர் ரெட்டி கைது செய்யப் பட்டார். சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை யில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது கூட்டாளிகளும் அடுத் தடுத்து கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், சிபிஐயும் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிந்தது.
இந்நிலையில், 6 மாதங்களுக்கு பின்னர் சேகர் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சேகர் ரெட்டியின் ரூ.33 கோடியே 74 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை மேற்கொண்டதற்கான ஆதாரங்களின் அடிப் படையிலேயே சேகர் ரெட்டி மீது இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.