திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்க பணி: மரங்களை வெட்டாமல் செயல்படுத்த பசுமை தீர்ப்பாயம் அனுமதி

திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்க பணி: மரங்களை வெட்டாமல் செயல்படுத்த பசுமை தீர்ப்பாயம் அனுமதி
Updated on
2 min read

திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்கப் பணிக்கு அனுமதி அளித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், அங்குள்ள மரங்களை வெட்டாமல் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்கப் பணிக்காக மரங்கள் வெட்டப் படுவதை பொதுமக்கள் எதிர்ப்பதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் கடந்த ஆண்டு செய்தி வெளியானது. அதை அடிப்படையாக கொண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் இந்திய அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விரிவாக்கப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அதனைத் தொடர்ந்து, கிரிவலப் பாதை விரிவாக்கப் பணியின் உண்மை நிலையை ஆராய, இரு நபர் கொண்ட வல்லுநர் குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. அந்தக் குழுவும் சில பரிந்துரைகளை அமர்வில் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசார ணைக்கு வந்தது.

அப்போது, அமர்வின் உறுப்பினர்கள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

கிரிவலப் பாதை பணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அப்பணிகளை எந்த மரங்களையும் வெட்டாமல் மேற்கொள்ள வேண்டும். அப்பகுதியில் புதர்களை அகற்றும்போது, வளர்ந்து வரும் மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளை அகற்றக்கூடாது. சோனகிரி வனப் பகுதி எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. சாலைகளை அமைக்கும்போது, சாலையின் தற்போது உள்ள உயரத்திலேயே பணிகளை மேற்கொள்ள வேண்டும். 14 கி.மீ. நீளம் கொண்ட கிரிவலப் பாதை முழுவதும் எல்இடி பல்புகளை பொருத்தி பராமரிக்கவேண்டும்.

விழாக் காலங்கள் மற்றும் பவுர்ணமி கிரிவலத்தின்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் நடமாடும் மருத்துவமனை மற்றும் நிலையாக இயங்கும் மருத்துவமனைக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். கிரிவலத்துக்கு பல்வேறு மாநிலத்தினர், வெளிநாட்டினர் உள்பட லட்சக்கணக்கானோர் வருகின்றனர். அதனால் அவர்களின் வசதிக்காகவும், அந்த நகரத்தில் வசிப்போருக்காகவும், பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும்.

திருவண்ணாமலை நகராட்சி உதவியுடன், தேவையான கழிப்பறைகளை, கழிவுநீர் குழாய் இணைப்பு வசதியுடன் ஏற்படுத்தவேண்டும். அதை சுத்தமாக பராமரிக்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவேண்டும்.

கிரிவலப் பாதையில் உள்ள நீர் நிலைகள் குறித்து ஆவணங்களை தயாரித்து பராமரிக்க வேண்டும். அந்த நீர்நிலைகளை முறையாக தூர்வாரி, தூய்மைப்படுத்தி பராமரிக்க வேண்டும்.

‘‘கான்கிரீட்களை’’ அமைக்கும்போது, மரங்களின் வேர்களுக்கு மழைநீர் கிடைக்க ஏதுவாக, மரங்களைச் சுற்றி 1 மீட்டர் சுற்றளவில் கான்கிரீட்களை அமைக்கக் கூடாது. தீயணைப்பு வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் நிற்க போதுமான இடத்தை ஒதுக்கவேண்டும்.

‘‘கான்கிரீட்களை’’ அமைக்கும்போது, மரங்களின் வேர்களுக்கு மழைநீர் கிடைக்க ஏதுவாக, மரங்களைச் சுற்றி 1 மீட்டர் சுற்றளவில் கான்கிரீட்களை அமைக்கக் கூடாது. தீயணைப்பு வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் நிற்க போதுமான இடத்தை ஒதுக்கவேண்டும்.

பாதம், தீர்த்தம் உள்ளிட்ட ஆன்மிக கட்டுமானங்கள் மற்றும் தொல்லியல் சார்ந்த கட்டுமானங்களை பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளவேண்டும். ஆனால், விதிகளை மீறி ஆக்கிரமித்த கட்டுமானங்களை அகற்ற எந்த தடையும் இல்லை.

அப்பகுதியில் உருவாகும் குப்பையை, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி, இயற்கை உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘‘பிளாஸ்டிக்’’ குப்பை உள்ளிட்டவற்றை கிரிவலப் பாதையில் போடாமல் இருக்க, பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in