

தலைமைச் செயலக சங்க நிர்வாகியிடம் சட்டப்பேரவை செயலர் வருத்தம் தெரிவித்ததால், இருதரப்புக்குமான பிரச்சினை முடிவுக்கு வந்தது.
தமிழக சட்டப்பேரவை செயலர் அ.மு.பி.ஜமாலுதீன் இம்மாதம் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதவி உயர்வுடன் மீள்பணி வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. மீள்பணி, பணி நீட்டிப்பு வழங்கப்படுவதால் அடுத்துள்ள அதிகாரிகளின் வாய்ப்பு பறிபோவதாக குறிப்பிட்டு, பணி நீட்டிப்பு வழங்க கூடாது என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியது.
இது தொடர்பாக, தலைமைச் செயலக சங்க நிர்வாகி ஹரிசங்கரை அழைத்து பேரவைத் தலைவர் ஜமாலுதின் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கத்தினர், சம்பந்தப்பட்ட நிர்வாகியிடம் பேரவை செயலர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவர் பி.தனபால் தலையிட்டதை தொடர்ந்து, பேரவை செயலர் ஜமாலுதீன் சம்பந்தப்பட்ட நிர்வாகி யிடம் வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து, இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக தலைமைச் செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன் நேற்று தெரிவித்துள்ளார்.