Published : 07 Feb 2023 06:59 PM
Last Updated : 07 Feb 2023 06:59 PM

திருப்புகழ் குழு பரிந்துரை: சென்னையில் அடுத்த 15 நாட்களில் வடிகால் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

திருப்புகழ் குழு கூட்டம்

சென்னை: திருப்புகழ் குழு பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் வகையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை அடுத்த 15 நாட்களில் தொடங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கி.மீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும்,உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

பருவமழைக்கு முன்பாக மழைநீர் வடிகால் பணிகள் முன்னூரிமை ஒன்று மற்றும் முன்னூரிமை இரண்டு என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் முன்னூரிமை இரண்டில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1-ல் 10 சிப்பங்கள், சென்னை 2.0 திட்டம் பகுதி 2ல் 10 சிப்பங்கள், வெள்ள நிவாரண நிதியில் 45 சிப்பங்கள், உலக வங்கி நிதியில் 38 சிப்பங்கள், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியில் 4 சிப்பங்கள் மற்றும் சிங்கார சென்னை நிதியில் குளங்கள் சீரமைக்கும் திட்டத்தில் 5 சிப்பங்கள் உள்ளிட்ட பணிகளை வடகிழக்கு பருவமழை மற்றும் குடிநீர் குழாய்கள், மின் மாற்றிகள், மின் கம்பங்கள் ஆகியவற்றை இடம் செய்யும் பணிகள் தாமதம் ஆகிய காரணத்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத முடியாத நிலை ஏற்பட்டது. இந்தப் பணிகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எதிர்வரும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு தயாராவது குறித்து, தலைமை செயலர் இறையன்பு தலைமையில், திருப்புகழ் கமிட்டி மற்றும் மாநகராட்சி, நீர்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று (பிப்.6) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கடந்தாண்டு மழைநீர் தேங்கிய விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை பகுதிகள் மற்றும், கொளத்தூர், பட்டளம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து, திருப்புகழ் கமிட்டி, அரசுக்கு சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”பருவமழைக்கு முன்னதாகவே துார்வாரும் பணிகளை துவங்க வேண்டும். மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள பிரதான நீர்நிலைகளான கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் ஆகியவற்றுடன், 54 கிளை கால்வாய்களையும் துார்வாரி பராமரிக்க வேண்டும். அதற்கான நிதி பெற்று பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது

இதன்படி சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை 15 நாட்களுக்குள் தொடங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, நிதி தேவை உள்ளிட்டவை குறித்த குறித்த விரிவான திட்டம் தயாரிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவை, ஓரிரு நாட்களில் முடிந்து, ஒப்பந்தம் வழங்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x