

ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் முழு மதுவிலக்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்; மதுக்கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மக்கள் நலனில் அக்கறைகொண்ட உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கதாகும்.
தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் புதிய மதுக்கடைகளை திறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கல்யாணசுந்தரம், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் தலைவிரித்தாடும் மதுக்கொடுமை குறித்து கவலை தெரிவித்துள்ளது.
மதுக்கடைகளுக்கு எதிராக கிராம சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் புதிய கடைகளை திறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் புதிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது; மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அதுமட்டுமின்றி தமிழக அரசு கடைபிடித்துவரும் மதுக்கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பில் இது தான் முக்கியமான அம்சமாகும்.
பாமக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பயனாக தமிழகம் முழுவதும் 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அக்கடைகள் குடியிருப்புப் பகுதிகளில் திறக்கப்படுவதையும், அதற்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்துவதையும் உயர் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறி தான் இப்படி ஓர் அறிவுரையை வழங்கியுள்ளனர்.
இதையே வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தான் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், தமிழக அரசின் நடவடிக்கையோ உச்ச நீதிமன்றத்தின் விருப்பத்தின் நோக்கத்திற்கும் முற்றிலும் எதிரான வகையில் அமைந்திருக்கிறது.
தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினால், அந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று உத்தரவாதம் அளித்தது. ஆனால், துறையூர் அருகில் மதுக்கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தச் சென்ற பெண்களை காவல்துறையினர் கயிறு கட்டி தடுத்தும், கண்மூடித்தனமாக தாக்கியும் காயப்படுத்தியுள்ளனர். தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.
ஒருபுறம் மக்களின் உணர்வுகளை மதிப்பதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து விட்டு, மறுபுறம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? காலம் காலமாக கடைபிடித்து வரும் இரட்டை வேடத்தை மதுவிலக்கு விஷயத்திலும் கடைபிடித்து நீதிமன்றங்களையும், பொதுமக்களையும் ஏமாற்ற முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவது தான் நல்ல அரசுக்கு இலக்கணமாகும். இதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் பொதுமக்களின் விருப்பமாகும். தமிழகத்தில் கடந்த மே ஒன்றாம் தேதி நடைபெற்ற கிராம அவைக் கூட்டங்களில், பாமக விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆயிரக்கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருப்பதே மக்களின் மனநிலைக்கு சாட்சியாகும். தொடங்கப்பட்ட நாளில் இருந்து பாமக வலியுறுத்தி வரும் கொள்கையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி ஆய்வு செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. மது விற்பது மட்டும் தான் அரசின் பணி என்ற அபத்தக் கொள்கையை விடுத்து, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு மக்கள் நலவாழ்வே அரசின் நோக்கம் என்ற அர்த்தமுள்ள கொள்கையை கடைபிடிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற அறிவுரையை ஏற்று தமிழகத்தின் மதுக்கொள்கையை மறு ஆய்வு செய்து ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் முழு மதுவிலக்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.