Published : 07 Feb 2023 04:49 AM
Last Updated : 07 Feb 2023 04:49 AM

அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பான பொதுக்குழு ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் தரப்பு தாக்கல் - ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகன்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசை ஆதரித்து 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்களை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று தாக்கல் செய்தார். இதற்கிடையே, தங்கள்தரப்பில் மனுதாக்கல் செய்த வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனுவை வாபஸ் வாங்குவார் என்று ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிப்.27-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ்வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்து,பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமிதரப்பில் கே.எஸ்.தென்னரசும்,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இருவரும் வேட்பாளரை நிறுத்தினால் ‘இரட்டை இலை’ சின்னம் முடங்கும் அபாயம் உள்ளநிலையில், சின்னத்தை தனக்குஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதில், இரு தரப்பினரும் கலந்துபேசி, பொதுக்குழு மூலமாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு, அவர்களது ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டன. தமிழ்மகன் உசேன் நேற்று டெல்லிசென்று, தேர்தல் ஆணையத்தில் அவற்றை தாக்கல் செய்தார். அவருடன் சென்றிருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சுற்றறிக்கை மூலம் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். அதன்மூலம் வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். அவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கும் உரிமை கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் மொத்தம் 2,665 பொதுக்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில் 15 பேர் காலமாகிவிட்டனர். 2 பதவிகள் காலாவதி ஆகிவிட்டன. 2 பேர் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். எஞ்சிய 2,646 பேர் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள். அவர்கள் அனைவருக்கும் நேரடியாகவோ, வாட்ஸ்அப், மின்னஞ்சல், விரைவு அஞ்சல் மூலமாகவோ சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

பொதுக்குழுவில் கே.எஸ்.தென்னரசுவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ‘அவரை ஏற்கலாம் அல்லது ஏற்க மறுக்கலாம். வேறு யாரையேனும் வேட்பாளராக தேர்வு செய்ய விரும்பினால் அந்தவேட்பாளர் பெயரை உறுப்பினர்கள் முன்மொழியலாம்’ என்று சுற்றறிக்கையில் தெளிவாக கூறப்பட் டுள்ளது.

ஒரு பெயர் மட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அது தவறு. யாரும் யாரையும் தடுக்கவில்லை. 2 முறை எம்எல்ஏவாக இருந்த மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தென்னரசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவைத்தலைவரான தமிழ்மகன் உசேன் அந்த பரிந்துரையை ஏற்று, பொதுக்குழு ஒப்புதலுக்கு வைத்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் பெயரை கொடுத்திருக்கலாம். பொதுக்குழுவில் பெயரை கொடுக்காமல் பொதுக்குழுவே ஒரு பெயரை தேர்ந்தெடுக்காது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி,பொதுக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட தென்னரசு, பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருக்கிறார். மொத்தம் உள்ள 2,646 வாக்குகளில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிட வேண்டும் என்று 2,501 வாக்குகள் பதிவாகியுள்ளன. அவரை ஏற்க மறுப்பதாக ஒரு வாக்குகூட வரவில்லை. அதேநேரம், 145 வாக்குகள் பதிவு செய் யப்படவில்லை.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி, பொதுக்குழு முடிவை அறிவிக்கும் அதிகாரம் படைத்தவர் தமிழ்மகன் உசேன். பொதுக்குழுவின் முடிவும், அதுதொடர்பான ஆவணங்களும் அவர் மூலமாக தேர்தல்ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம்7-ம் தேதி (இன்று) முடிகிறது. அதற்குள் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்: இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆணை பெற்று, ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனுவை திரும்ப பெறுவார். இரட்டை இலை சின்னம் எந்த வகையிலும் முடக்கப்பட கூடாது என்ற எங்கள் நோக்கத்துக்காக தேர்தலில் இருந்து அவர் விலகுகிறார். இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x