

தஞ்சாவூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், தமிழக அரசு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே நிவாரணம் அறிவித்துள்ளது. இது, போதுமானதாக இல்லை என்பதால், அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கருணாநிதிக்கு பிரம்மாண்டமான ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கடலுக்குள் அமைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நாங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறோம். மாற்றுக் கருத்து தெரிவிப்பது தவறல்ல. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் வன்மத்தை கக்குவது எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை.
வேங்கைவயலில் குடிநீரில் மனித கழிவை கலந்த குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் ஒரே கோரிக்கை. சிபிசிஐடி விசாரணையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள்காத்திருக்கின்றனர். தமிழக அரசும் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கும் என நம்புகிறோம் என்றார்.