

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள சாலை திட்டங்களுக்கு உலக வங்கி அளிக்கும் நிதி உதவியை ரூ.1,800 கோடியில் இருந்து ரூ.3,000 கோடியாக அதிகரித்து தர வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா உலக வங்கி தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெய லலிதாவை உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் திங்கட்கிழமை தலைமை செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
இந்தியாவில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், அதிகப்படியான திட்டங்கள் செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக திகழ்கிறது. சர்வதேச முதலீட்டாளர் களின் விருப்பமான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
உலக வங்கியிடம் இருந்து குறைந்த கடனில் நிதியுதவிகளை பெறுவதோடு, தொழில்நுட்ப உதவிகளையும் தமிழகம் பெற்று வருகிறது.
ஒருங்கிணைந்த சத்துணவு திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம்-1 மற்றும் 2, தமிழ்நாடு சாலை துறை திட்டம்-1, தமிழ்நாடு சுகாதார திட்டம் ஆகிய திட்டங்கள் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், தமிழகத்தின் பொரு ளாதார வளர்ச்சிக்கு உலக வங்கி முக்கியப் பங்காற்றி வருகிறது.
தமிழகத்தில் இரண்டாவது சாலை மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்து, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு உலக வங்கி ரூ.1,800 கோடி மட்டுமே நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த நிதியை ரூ. 3,000 கோடியாக அதிகரித்து வழங்க வேண்டும்.
இதேபோல், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுவாழ்வு உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் உலக வங்கி தனது ஆதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் உலக வங்கியின் கிளை சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் கிளைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு அளிக்கும். இதன் மூலம், வங்கியின் கிளை மிகப் பெரிய வளர்ச்சி அடையும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, உலக வங்கி தலைவர் பேசும்போது, ``பொது சேவையில் தமிழக அரசு மகத்தான சேவை ஆற்றி வருகிறது. அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப் பாக, குழந்தை இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு கால இறப்பு விகிதம் ஆகியவை குறைந்துள்ளன. தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கிராமப்புறத்தில் வறுமையை ஒழிப்பதற்காக தமிழக அரசு இலவச கறவை மாடுகள், ஆடுகளை வழங்கியுள்ளது. இதன் மூலம், சமூகத்தில் அனைத்து தரப்பினரும் சமமாக வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைதி நிலவுவதோடு, திறமையான தொழிலாளர்களும் இருப்பதால், முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது’’ என்றார்.
முன்னதாக, நாட்டில் பெண் களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து உலக வங்கி தலைவர் கவலை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த முதல்வர், தமிழகத்தில் பெண்களின் முன் னேற்றத்திற்காக செயல்படுத் தப்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினார்.
இந்த சந்திப்பின் போது, உலக வங்கியின் இயக்குநர்கள் செர்ஜி தேவியக்ஸ், டாக்டர் சோமநாதன் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
உலக வங்கி தலைவர் பாராட்டு
உலக வங்கி தலைவர் ஜிம் யங் கிம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்வருடனான சந்திப்பு மிக மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித் தோம். தமிழகத்தில் செயல்படுத் தப்பட்டு வரும் மக்கள் நலதிட்டங் கள் பிற மாநிலங்களுக்கு மட்டு மின்றி, உலகத்திற்கே முன்னுதார ணமாக அமைந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதற்காக புதுவாயல் கிராமத் தில் வேலைவாய்ப்பு திறன்மேம் பாட்டு பயிற்சி மையம் அமைக்கப் பட்டுள்ளது. அதை நான் செவ்வாய்க் கிழமை நேரில் சென்று பார்வையிட உள்ளேன். தமிழகத்தில் செயல்படுத் தப்பட்டு வரும் திட்டங்களுக்கு உலக வங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கும்’’ என்றார் அவர்.