

கோவை: கோவை வேடப்பட்டி ராஜன் நகரைச் சேர்ந்தவர் மரிய ஜான்சன்(42). இவர், அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் ஜார்ஜ் டேனியல்(13), இளைய மகன் கார்ரெல்(11).
இவர்கள் உள்ளிட்ட நால்வர் தொண்டாமுத்தூரில் உள்ள சித்திரைச்சாவடி புதுக்குளத்துக்கு நேற்று முன்தினம் குளிக்கச் சென்றனர். அப்போது கார்ரெல் குளத்துக்குள் தவறி விழுந்தார். இதைப் பார்த்த அண்ணன் ஜார்ஜ் டேனியல், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தம்பியை காப்பாற்ற குளத்துக்குள் குதித்தார்.
இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தத்தளித்தனர். இதைப் பார்த்த மரிய ஜான்சன் குளத்துக்குள் குதித்து, இரு மகன்களையும் போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். பின்னர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அழைத்துச் சென்றார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ஜார்ஜ் டேனியல் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.