

கோவை: உழவர் பெருந்தலைவர் என அழைக்கப்படும் நாராயணசாமி நாயுடு வாழ்ந்த வீட்டை நூலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவியும், உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மரியாதை செய்தார். மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, நாராயணசாமி நாயுடுவின் குடும்பத்தினர், திமுக மாவட்டச் செயலாளர்கள் தளபதி முருகேசன், தொ.அ.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, அரசு சார்பில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த அவர், கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து நிறைவேற்றித் தந்த மாமனிதர்.
நாராயணசாமி நாயுடுவின் நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும். அவர் வாழ்ந்த வீட்டை நூலகமாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். வரக்கூடிய ஆண்டு அவரது நூற்றாண்டாகும். இதை அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.