வடபழனி தீ விபத்துக்கு சென்னை மாநகராட்சியின் அலட்சியப் போக்கே காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

வடபழனி தீ விபத்துக்கு சென்னை மாநகராட்சியின் அலட்சியப் போக்கே காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியின் அலட்சியப் போக்கு, கவனக்குறைவுதான் வடபழனி தீ விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முதுகலை பட்டப்படிப்பு படித்த மருத்துவ மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்பது மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அரசு மருத்துவ மனைகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அனுபவமிக்க மருத்துவர்களாக பணிபுரிய முடியும்.

எனவே முதுகலை பட்டப்படிப்பு படிக்கின்ற மருத்துவ மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு என்பதை மறுபரிசீலனை செய்து, மத்திய, மாநில அரசுகள் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு எல்லா விதத்திலும் உதவி அளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு அனுபவமுள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கிடைக்ககூடிய வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில் முதுகலை பட்டப்படிப்பு மருத்துவர்கள் வெளிநாட்டிற்கு செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதனால் தமிழகத்தில் கிராமப்புறம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாத ஆபாயம் ஏற்படும்.

முதன் முதலில் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு, தேர்வு எழுதும் முறைகளை அரசு முன்கூட்டியே செய்தித்தாள்களிலும், மீடியாக்களிலும் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தேர்வு எழுதும் இடத்திலேயே மாணவர்களை அரைக் கை சட்டை அணியவேண்டும் என்று சொல்வது, பெண்களை செயின், தோடு போன்ற அணிகலன்களை எடுக்கச் செய்தது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே முறையான அறிவிப்பை செய்யத் தவறிய தமிழக அரசை வன்மையாக கடிக்கின்றேன்.

வடபழனியில் உரிய அனுமதியில்லாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணம்தான், இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பழுதடைந்த மின் வயர்களால் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் அலட்சியப்போக்கு, கவனக்குறைவு தான் இந்த தீ விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

உயிர்களை இழந்தபிறகு இழப்பீடுகளை வழங்குவதால் எந்த பலனும் இல்லை. எனவே கோடைகாலம் என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாநகராட்சி பழுதடைந்த இதுபோன்ற கட்டிடங்களை உடனடியாக ஆய்வு செய்து, இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் தடுக்கவேண்டும்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in