இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல்திறன் தகுதித் தேர்வு தொடக்கம்: தமிழகம் முழுவதும் பிப்.11 வரை நடக்கிறது

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் தேர்வர்களின் ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள். படம்: பு.க.பிரவீன்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் தேர்வர்களின் ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள். படம்: பு.க.பிரவீன்.
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல்திறன் தகுதித் தேர்வு நேற்று தொடங்கியது. வரும் 11-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் என 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவ.27-ம் தேதி நடைபெற்றது. இத் தேர்வை தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் எழுதினர்.

இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரம், தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 226பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி, தமிழகம் முழுவதும் 21 மையங்களில் நேற்று உடல்திறன் தகுதி தேர்வு தொடங்கியது. இத் தேர்வானது வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

18,672 பேருக்கு அழைப்பு: எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தின் அடிப்படையில் கட்-ஆஃப் நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 18 ஆயிரத்து 672 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 15 ஆயிரத்து 158 இளைஞர்கள், 3 ஆயிரத்து 514 இளம் பெண்கள் அடங்குவர். இவர்களில், 8 பேர் கர்ப்பிணியாக உள்ளனர். இதனால், அவர்களுக்கான உடல்தகுதி தேர்வு, அவர்களது மகப்பேறு காலத்துக்கு பிறகு திருச்சியில் தனியாக நடத்தப்பட உள்ளது.

உடல்திறன் தேர்வின்போது சான்றிதழ் சரிபார்த்தல், மார்பளவு சரிபார்த்தல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடைபெறும். பெண்களுக்கு குண்டு எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல், 100 மீட்டர் ஓட்டம் நடத்தப்படும்.

சென்னையில் ஆண்களுக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்திலும், பெண்களுக்கு ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மைதானத்திலும் உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. தினமும் 350 பேர் அழைக்கப்பட்டு காலை 10 முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in