

சென்னை: மத்திய பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.குமார் தலைமை தாங்கினார். மத்தியக் குழு உறுப்பினர் ஜீவா, மாவட்ட நிர்வாகிகள் கே.பி.பாபு, லாரன்ஸ், என்.சாந்தி, ஏ.என்.சமபத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.குமார் பேசியதாவது: மத்திய அரசு கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ.90கோடியை குறைத்துள்ளது. அதேபோல் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியையும் குறைத்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் தனது பங்காக ரூ.300-ஐ மட்டுமே வழங்குவதுடன், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளில் 3.8 சதவீதம் பேருக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகளைப் புறக்கணிக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.