Published : 07 Feb 2023 06:32 AM
Last Updated : 07 Feb 2023 06:32 AM
சென்னை: ஜனவரி மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டையில் கல்லூரி பேராசிரியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், ஜனவரி மாதம் வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்கக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத் தலைவர் காந்தி ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 163 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் எந்த கல்லூரியிலும் சம்பள பட்டியலும் தயாராகவில்லை. இதனால் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே எங்களுக்குத் தமிழக அரசு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்.
இது தொடர்பாக இயக்குநர், இணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, யாரும் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் நிதி ஆலோசகர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுப்பிய சுற்றறிக்கையில் பணம் இல்லை என்றும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டாம் என்றும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையை அவர் திரும்பப் பெற வேண்டும் எனப் பலமுறை கேட்டும் அதைச் செய்ய மறுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, பேராசிரியர்கள் தனித்தனியாகச் சென்று கல்லூரி கல்வி இயக்குநரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதாக இருந்தனர். ஆனால், அதற்குகாவல் துறை மறுப்பு தெரிவித்ததால் அந்த முயற்சியை அவர்கள் கைவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT