

சென்னை: எல்ஐசி மற்றும் பொதுத் துறை வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்யுமாறு மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது குறித்து, நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில், சென்னை எல்ஐசி மண்டல அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காங். எஸ்.சி. பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமார், பொதுச் செயலாளர் சித்தரஞ்சன் ஆகியோர் பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் விற்கப்பட்டும், சூறையாடப்பட்டும் வருகின்றன.
உச்சகட்டமாக, எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில், ஏழை, நடுத்தர மக்கள் சேமித்துவைத்த முதலீட்டுத் தொகை ரூ.82 ஆயிரம் கோடியை, எவ்வித உத்தரவாதமுமின்றி அதானி குழுமத்துக்கு வழங்குமாறு எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு விசாரணை நடத்தாவிட்டால், மத்திய அரசைக் கண்டித்தும், பாஜக தலைவர்கள் வீடு, அலுவலகங்கள் மற்றும் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தப்படும். மேலும், அதானிக்குத் துணைபோன பிரதமர் மோடி மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும்.
சாதாரண மக்கள் தங்களது எதிர்காலத்துக்காக சிறுக சிறுக பணம் சேமித்து, எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்தப் பணம் திருடப்பட்டுள்ளது. இதை மீட்டுத் தர காங்கிரஸ் கட்சி பாடுபடும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.