

சென்னை: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில், பழைய குப்பை அகற்றப்பட்டு 94 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பைக் கிடங்கில் 225 ஏக்கர் நிலப்பரப்பில், குவிக்கப்பட்டிருந்த சுமார் 29.28 லட்சம் கனமீட்டர் மரபுவழி (Legacy) கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த பயோ மைனிங் முறையில் அகற்றி நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் ரூ.350 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மொத்தம் உள்ள 6 சிப்பங்களில், சிப்பம் 3, 4 மற்றும் 5 ஆகியவற்றில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று 94 ஏக்கர் நிலப்பரப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
பெருங்குடியில் நிறைவு செய்யப்பட்ட பயோ-மைனிங் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், பயோ-மைனிங் தொழில்நுட்பத்தின் மூலம் 29,283.98 கனமீட்டர் பழைய திடக்கழிவுகள் அறிவியல் முறையில் அகற்றப்பட்டுள்ளன.
பயோ-மைனிங் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட 94 ஏக்கர் நிலப்பரப்பையும் ஆணையர் பார்வையிட்டார். தொடர்ந்து, பெருங்குடி குப்பைக்கிடங்கில் 2ம் கட்டமாக ரூ.53.60 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 5.50 லட்சம் டன் பழைய திடக்கழிவுகளின் பயோ-மைனிங் பணிகளை ஆணையர் பார்வையிட்டு, இப்பணிகளை திட்ட காலத்துக்குள் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்கப்பட்ட 94 ஏக்கர் நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அமைக்கப்படவுள்ள 100 டன் திறன் கொண்ட உரமாக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ஆணையர், பணிகளை விரைந்து முடித்து, ஜூன் 30-க்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப்ரசூல் ஆகியோர் உடனிருந்தனர்.