

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 4 பேர் தீக்குளிக்க முயன்றனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மக்கான் தெருவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி காதர்மைதீன். இவருக்கு அரசு சார்பில் திண்டுக்கல் அருகே வாழைக்காய்பட்டி பிரிவில் ஒரு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது. காதர் மைதீன் மறைவுக்குப் பின்பு, அந்த இடத்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பித்தளைபட்டியைச் சேர்ந்த நபர், தனது மனைவி பெயரில் போலி பத்திரம் தயாரித்து 2009-ம் ஆண்டில் பத்திரப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த காதர்மைதீனின் மகன் சையது இப்ராஹிம் மாவட்ட பத்திரப் பதிவாளர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சையது இப்ராஹிம், அவரது மனைவி ரஷிதா பேகம் ஆகியோர் மாவட்டப் பதிவாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர்.
அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதேபோல் வடமதுரை பகுதியை சேர்ந்த காளியம்மாள், தன்னுடைய இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அதன் பின்பு ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்குக்குள் மனு அளிக்க வந்த சித்தரேவு ஊராட்சி செல்லம்பட்டியைச் சேர்ந்த விவசாயி வையாபுரி, வரத்து வாய்க்கால் தூர்வாரப்படாததால் தனது நிலத்துக்கு தண்ணீர் வருவதில்லை எனக் கூறி, திடீரென அதிகாரிகள் முன்னிலையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அருகிலிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், பாதுகாப்பு குளறுபடியை காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.