ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எதிரொலி - ‘பள்ளிபாளையம் சிக்கன்’ விற்பனை அதிகரிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எதிரொலி - ‘பள்ளிபாளையம் சிக்கன்’ விற்பனை அதிகரிப்பு
Updated on
1 min read

நாமக்கல்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எதிரொலியாக பள்ளிபாளையம் ஓட்டல்களில், ‘பள்ளிபாளையம் சிக்கன்’ விற்பனை அதிகரித்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (7-ம் தேதி) நிறைவடைகிறது. இதனிடையே, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தொகுதிக்கு தொடர்புடையவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்து அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்துக்கு முகாமிட்டுள்ளனர்.

இதையடுத்து, ஈரோடு மற்றும் அருகே உள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடுகள் மற்றும் ஓட்டல் அறைகளில் வெளி மாவட்டத்தினர் தங்கியுள்ளனர். பள்ளிபாளையத்தில் உள்ள விடுதிகளும் நிரம்பியுள்ளன. இதன் எதிரொலியாக பள்ளிபாளையத்தில் உள்ள ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் வர்த்தக சுழற்சி அதிகரித்துள்ளது.

குறிப்பாகக் குளிருக்கு இதமாக இருக்கும் அசைவ உணவுகளையே அரசியல் கட்சியினர் அதிகம் நாடுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ‘பள்ளிபாளையம் சிக்கன்’ அதிகம் விற்பனை செய்யப்படுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக பள்ளிபாளையத்தைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிபாளையத்தில் உள்ள ஓட்டல்களில் மற்ற இடங்களைப்போல சைவம், அசைவம் சமைக்கப்படுகிறது. இதில், ‘பள்ளிபாளையம் சிக்கன்’ எண்ணெய் பயன்படுத்தாமல் காய்ந்த மிளகாய், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்யப்படும்.

தரத்துக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் சுவை அலாதியாக இருக்கும் என்பதால் இறைச்சிப் பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தங்கியுள்ள வெளி மாவட்ட அரசியல் கட்சியினர், ‘பள்ளிபாளையம் சிக்கனை’ விரும்பி சாப்பிடுவதால், விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in