ஆசிரியர் தகுதி தேர்வில் குளறுபடி: தேதி மாற்றத்தில் 13 பேர் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தஞ்சாவூர்: தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் 2 தேர்வு பிப்.3 -ம் தேதி தொடங்கி, பிப்.14-ம்தேதி வரை நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 கல்லூரிகளில் இந்தத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில், தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று தேர்வு எழுத வந்த தேர்வாளர்களுக்கு, அந்தத் தேர்வு 4-ம் தேதியே முடிந்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். இதனால், தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.ஏசுராஜா தலைமையில் தேர்வாளர்கள் தேர்வு மையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். தகவலறிந்து அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள், தேர்வு எழுத வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதனால், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.சிவக்குமார் கூறும்போது, ‘‘தேர்வாளர்களுக்கு முதலில் ஒதுக்கீடு செய்து எந்த மாவட்டம், எந்த மையம், எந்த தேதி என குறிப்பிட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பிறகு தேர்வு நுழைவுச்சீட்டு பதிவேற்றம் செய்யப்படும்.

தற்போது வந்தவர்கள் ஒதுக்கீடு செய்த பதிவிறக்கத்தை கொண்டு வந்தனர். இவர்களுக்கான தேர்வு பிப்.4-ம் தேதியே முடிந்துவிட்டது. அன்றைய தினம்பலர் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். தற்போது பதிவிறக்கம் செய்ததில் தேதி மாறி இருந்ததில், 13 பேர்தேர்வு எழுதவில்லை. அவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவிடுத்த கோரிக்கையை ஏற்று, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று மற்றொரு நாளில் அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in