

23.9 லட்சம் விவசாயிகளை சென்று சேரும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறபித்துள்ளது. இதன் மூலம் 30 லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர் நிலங்கள் காப்பீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்படும்.
பிரதமரிடம் முறையிட்ட முதல்வர்:
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கான மத்திய அரசின் பங்கு இதுநாள் வரை கொடுக்கப்படவில்லை. மாநில அரசு தனது பங்கை விடுவித்துள்ள நிலையில் விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு தேசிய காப்பீட்டுத் திட்டத்தில் தனது பங்கான 168 கோடி ரூபாயை வழங்கவில்லை என்று தனது கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தார்.
தமிழக விவசாயிகளுக்கு காப்பீடு:
தமிழக விவசாயிகளுக்கான பயிர் காபீட்டுத் திட்டத்தை மேலும் நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறபித்துள்ளது. இதன்படி 2017-18ம் ஆண்டில் 23.9 லட்சம் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். இதில் 15.2 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள்.
இந்த திட்டத்தை விரிவாக்குவதன் மூலம் 30 லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர் நிலங்கள் காப்பீட்டுத் திட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரப்படும்.
மேலும் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தை தொடர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆயுள் காப்பீடும் கிடைக்கும். முதல் கட்டமாக நாகப்பட்டினப் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
’காப்பீட்டு நிறுவனங்கள் தாமதம்’
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் தராமால் காலம் தாழ்த்தி வருவது பல மட்டத்தில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு சமர்பிக்கப்பட்ட மனுவில் முதல்வர் இந்த விவகாரம் குறித்து சுட்டிக் காட்டி தொடர்புடைய காப்பீட்டு நிறுவனங்கள் நிலுவை தொகையை விரைந்து வழங்க வலியுறுத்துமாறு கோரியிருந்தார்.
404 கோடி ரூபாய் வழங்கப்பட்டது:
2015-16ம் ஆண்டில் காப்பீடு செய்திருந்த 2.96 லட்சம் விவசாயிகளுக்கு 404 கோடி ரூபாய் இழப்பீடு நிதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.