

ஏ.பி.ஜே..அப்துல் கலாமின் ஆலோசனையின்படி அவரே தொடங்கி வைத்தது தான் ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கும் விழா ஆகும். கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த விழா ஆண்டு தோறும் சென்னையில் நடந்து வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வருகிற 27-ந்தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவின் நிகழ்ச்சிகள் மாலை 6 மணி வரையிலும் நீடிக்கிறது. பிரைம் பாயின்ட் பவுண்டேசன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமும், ’பிரிசென்ஸ்’ என்ற இணையதள பத்திரிகையும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்தி வருகின்றன.
ஒரே விருது
நாடாளுமன்ற சாதனையாளர்களுக்கு மக்கள் மன்றத்தில் இருந்து வழங்கப்படும் ஒரே விருது இது தான்.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களில் சிறந்த பங்களிப்பை நாடாளுமன்றத்தில் வழங்கியோருக்கான ‘சன்சத் ரத்னா- 2017’ விருதுகளை இவ்விழாவில் கேரள மாநில ஆளுநர் நீதிபதி சதாசிவம் அளிக்கிறார்.
இவ்வாண்டுக்கான ‘சன்சத் ரத்னா 2017’ விருதுகளை பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் விவரம் வருமாறு:-
ஸ்ரீரங்க்அப்பா பார்னே (தொகுதி மாவேல்- மகாராஷ்டிரா, சிவசேனா கட்சி)
ராஜீவ்சங்கர் ராவ் சதவ் (தொகுதி ஹிங்கோலி, மகாராஷ்டிரா- காங்கிரஸ் கட்சி)
தனஞ்செய் பீம் ராவ் மகாதிக் (தொகுதி- கோலாப்பூர், மகாராஷ்டிரா- தேசியவாத காங்கிரஸ்)
ஆகியோர் ஆவர். இவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
நாடாளுமன்ற விவாதங்களில் பெருமளவு பங்கேற்றோர், இதர நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அதிக அளவில் கலந்து கொண்டோரில் மிக சிறந்தோர் என தேர்வு பெற்றவர்கள் வருமாறு:-
பார்த்ரு ஹரி மாதப் (தொகுதி கட்டாக், ஒடிசா- பிஜூர் ஜனதா தளம்)
என்.கே.பிரேமச்சந்திரன் (தொகுதி கொல்லம், கேரளா- புரட்சி சோசலிஸ்ட் கட்சி)
மகளி்ர் பிரிவில் சிறந்த வகையில் நாடாளுமன்ற பங்களிப்பு வழங்கிய டாக்டர் ஹீனா விஜயகுமார் காவித் (தொகுதி- நந்தூர்பர், மகாராஷ்டிரா, பா.ஜ.க.) விருது பெறுகிறார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலத்தை கடந்த 2016ம் ஆண்டில் முழுமை செய்தோரில் சிறந்த முறையில் மாநிலங்களவையில் செயல்பட்டதற்காக சஞ்சய் ராவத் (சிவசேனா- மகாராஷ்டிரா)
கே.என்.பாலகோபால் (மார்க்சிஸ்ட் கட்சி- கேரளா)
டாக்டர் டி.என்.சீமா (மார்க்சிஸ்ட் கட்சி- கேரளா) ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
விருதுக்கு உரியோரை தேர்வு செய்த குழுவின் தலைவர் ஆனந்த் ராவ் அடிசில் (5 முறை எம்.பி.)
இக்குழுவில் மத்திய உள்துறை இணை அமைச்சரும், 4 முறை எம்.பி.யுமான ஹன்ஸ்ராஜ் அகிர், மத்தியநிதித்துறை இணை அமைச்சரும், 2-ம் முறை எம்.பி.யுமான அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோரும் உறுப்பினர்கள் ஆவர்.
இம்மூவருமே தங்களின் நாடாளுமன்ற செயல்பாடுகள் காரணமாக, ‘சன்சத் மகாரத்னா’ விருதுகளை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் முடிந்த பின்னர் தொகுக்கப்படும் புள்ளி விபரங்களின்படி விருதுகளுக்கு உரியோர் தேர்வு செய்யப்படுகின்றனர். முதலாண்டில் விருது வழங்கும் விழாவில் டெல்லியில் இருந்தபடி அப்துல் கலாம் டெலிகான்பிரன்ஸ் வாயிலாக உரை நிகழ்த்தி இருந்தார். தனது கடைசி நூலான, ‘மாற்றத்தின் காணதோர் அறிக்கை’ (Manifesto for Change) -ல் ஒரு தனி அத்தியாயத்தையே சன்சத் ரத்னா விருதுக்கென ஒதுக்கி எழுதியிருந்தார் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
தேர்வுக்கு உரியோரின் பட்டியல் தயாரிப்பு பணி வெளிப்படையானது. நாடாளுமன்ற செயலகங்களும், பி.ஆர்.எஸ். இந்தியா நிறுவனமும் வழங்கியிருக்கும் புள்ளி விபரங்களை அடிப்படையாக வைத்து தேர்வு நடத்தப்படுகிறது.