

மதுரை: “நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் எய்ம்ஸ் திட்டத்தை துவங்காவிட்டால் மதுரை மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுக்கும் நிலை வரும்” என மதுரையில் நடந்த அரசு விழாவில் மத்திய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து பேசினார்.
மதுரையில் இன்று தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 72 ஆயிரத்து 92 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.180 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியது: ”மதுரை துங்கா நகரம், கூடல் நகரம், ஜல்லிக்கட்டு மாவட்டம். இது நமது அனைவருக்கும் நெருக்கமான மாவட்டம், கண்ணகி நீதி கேட்ட மண். கண்ணகி ஒற்றை சிலம்பை வைத்து நீதி கேட்டதுபோல், எய்ம்ஸ் கட்டி முடிக்காத மத்திய அரசை கண்டித்து ஒற்றை செங்கலை வைத்து மதுரையிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு எடுத்துக்கொண்டு போனேன்.
மதுரையில் ரூ.115 கோடி செலவில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. செப்.15-ல் இந்தியாவின் முன்னோடி திட்டமாக காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் மதுரையிலிருந்து தொடங்கி வைத்தார். மதுரை நகராட்சியை மாநகராட்சியாக்கியதும், உயர் நீதிமன்ற கிளையும் அமைத்தது கருணாநிதி ஆட்சியில்தான். மதுரையின் வளர்ச்சியும், மக்களின் வாழ்வாதாரமும் உயர்ந்து கொண்டேபோவது திமுக ஆட்சியில்தான். தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்ன 75 சதவீதம் நிறைவேற்றியிருக்கிறார்.
திமுக அரசு சொன்னதை செய்த சாதனையை சொல்வதற்குள் எதிர்க்கட்சிகள் வாட்ஸ்ஆப் மூலம் தவறாக பரப்புகின்றனர். எங்களது ஆட்சியின் சாதனையை வெளியில் சொல்லாததுதான் பலவீனம். அதிமுக ஆட்சியில் தமிழகம் அடிமை ஆட்சியாக இருந்தது. அதனை தலைநிமிரச் செய்தவர் நமது முதல்வர்.
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கான முதல் கையெழுத்து இட்டவர். முதலமைச்சரின் புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டது. பெண்கள் படிப்பிலும், உழைப்பிலும் ஆண்களை விட ஒருபடி உயர்ந்திருக்கிறார்கள். மகளிர் குழுக்களுக்கு வழங்கும் கடனுதவியை எதிர்நீச்சல் போடும் துடுப்பாகத்தான் பார்க்கிறேன். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களைத்தான் எனக்கு பரிசாக வழங்க வேண்டும் என அறிவித்திருந்தேன். நீங்கள் பெறும் கடன் வெறும் பணமல்ல, அரசுக்கு உங்கள் மீதான அக்கறை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டக் கோரி கடந்த தேர்தலின்போது ஒற்றை செங்கலை எடுத்தேன். ஆனால் இன்னும் கட்டவில்லை. அதற்குப் பின் கலைஞர் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படவுள்ளன. இதிலிருந்து மக்கள் நலனில் அக்கறையோடு செயல்படும் அரசுக்கும், வாயில் வடை சுடும் அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மத்திய அரசு நிதி ஒதுக்கி எய்ம்ஸ் பணிகளை தொடங்காவிட்டால் அதே செங்கல்லைத்தான் எடுக்க வேண்டிவரும். நான் செங்கலை எடுப்பதற்குமுன் மதுரை மக்கள் அனைவரும் செங்கலை எடுப்பார்கள். மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமைனக்கு நிதி ஒதுக்கி பணிகளை துவக்க வேண்டும். இல்லையென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நான் செங்கல்லை எடுப்பதற்குள் மதுரை மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுக்கும் நிலை வரும் என மத்திய அரசை எச்சரிக்கிறேன்.
எய்ம்ஸ் பணிகள் குறித்து இங்குள்ள அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் யாரும் கேட்கமாட்டார்கள். அதிமுகவினர் தேர்தலுக்குத்தான் மக்களை சந்திப்பார்கள். ஆனால் திமுக தேர்தலாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடுதான் இருக்கும். மக்கேளோடு பயணித்து, மக்களோடு கலந்துதான் திமுக செயல்படும்.
கரோனா காலத்திலும் உங்களோடு உடனிருந்தோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் உங்களுடன் இருக்கும் திமுக அரசுக்கும் எப்போதும் நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். மகளிர் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கிறேன். என்றும் உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருப்பேன்” என்று உதயநிதி பேசினார்.
மதுரை மாவட்டஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமை வகித்த இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.