

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான நெல், உளுந்து பயிருக்கு உடனடியாக நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வருக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் சேதமடைந்தது. மேலும், உளுந்து, நிலக்கடலை பயிர்களும் மழையினால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு இன்று முதல்வரை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தனர். பின்னர் அமைச்சர், அதிகாரிகளிடம் ஆலோசித்த பின்னர் முதல்வர், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணமும், விரைந்து அறுவடை செய்ய வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் அறுவடை இயந்திரங்களை வழங்கவும், உளுந்து உள்ளிட்ட மானாவாரிப் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரமும், 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு 8 கிலோ விதை உளுந்தும், பயிர் காப்பீடு திட்டத்தில் சோதனை அறுவடை முடிந்தாலும், மீண்டும் சோதனை அறுவடை செய்ய வேண்டும் என கூறி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து நசுவினி ஆற்று படுக்கை மேம்பாட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் வீரசேனன், "மழை பாதிக்க உடன் அமைச்சர்களை அனுப்பி ஆய்வு செய்த 24 மணி நேரத்தில் நிவாரணம் அறிவத்த முதல்வரை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் நிவாரணத்தை உயர்த்தி வழங்கியிருக்க வேண்டும், அதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறும்போது, “பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்பு அதிகமாக உள்ளது. கணக்கெடுப்பை விடுபடாமல் மேற்கொள்ள வேண்டும். சம்பாவுக்கு பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில், அதற்குண்டான இழப்பீடு முதல்வர் பெற்றுத் தர வேண்டும்” என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறும்போது, “உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், அதற்கு ஏற்றார் போல் நிவாரணத்தை உயர்த்தி தர வேண்டும். ஹெக்டேருக்கு உற்பத்தி செலவு என்பது ரூ.75 ஆயிரம் ஆகிறது. ஆனால், ரூ.20 ஆயிரம் என்பது போதாது. ஆனால், பாதிப்பை உணர்ந்து உடனடியாக நிவாரணம் அறிவித்த முதல்வரை பாராட்டுகிறோம்" என்றார்.