Published : 06 Feb 2023 02:47 PM
Last Updated : 06 Feb 2023 02:47 PM

சிறுவன் கோகுல்ஸ்ரீ மரணம் எதிரொலி: கூர்நோக்கு இல்லங்களை மேம்படுத்த குழு அமைக்கிறது தமிழக அரசு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கூர்நோக்கு இல்லங்களை மேம்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ 31-12-2022 அன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, சிறுவனின் தாயார் பிரியாவிற்கு இழப்பீடாக 7.5 லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியாக ரூபாய் 2.5 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்கி ஆணையிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் ஆறு பேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் பிரியாவிற்கு தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் தற்போது கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை ஒதுக்கீடு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x