Published : 06 Feb 2023 06:28 AM
Last Updated : 06 Feb 2023 06:28 AM

ஈரோடு இடைத்தேர்தல் | ஓபிஎஸ் பிரச்சாரம் தொடர்பாக கட்சித் தலைமை முடிவு செய்யும்: ஜெயக்குமார் கருத்து

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்ய முன்வந்தால், அதை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல், விரைவு அஞ்சல் மூலமாகவும், சிலருக்கு நேரடியாகவும் கடிதம் அனுப்பியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் வாட்ஸ்அப், மின்னஞ்சல் மற்றும் நேரில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை 100 சதவீதம் பின்பற்றி, கடிதம் அனுப்பும் பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்ய முன்வந்தால் அதை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். பன்னீர்செல்வத்தின் வேட்பாளரை திரும்பப் பெறுவது தொடர்பாக, அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய 7-ம் தேதி கடைசி நாள். அதற்குள் அவர்களது நிலைப்பாட்டை அறிவிப்பார்கள். உட்கட்சி விஷயங்களில் பாஜக எப்போதும் தலையிட்டது இல்லை. தோழமை, நட்பு, கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் கருத்துகளை சொல்லலாம். அதை சொல்லக்கூடாது என கூற முடியாது. கருத்து தெரிவிப்பதற்கும், தலையிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அவர்கள் கூறும் கருத்தை ஏற்பதும், மறுப்பதும் எங்களுடைய விருப்பம். இவ்வாறு அவர் கூறினார். உட்கட்சி விஷயங்களில் பாஜக தலையிட்டது இல்லை. தோழமை என்ற அடிப்படையில் கருத்துகளை சொல்லலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x