

சென்னை: தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அணை பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி செய்ய தொழில்நுட்பக் கல்விக் குழுமம்(ஏஐசிடிஇ) அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து ஏஐசிடிஇ ஆலோசகர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன், அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: இந்திய அரசாங்கத்தின் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், அணைகளுடன் தொடர்புடைய மனிதவளத்தின் திறனை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்தவகையில் அணைகள் பாதுகாப்பு நிர்வாகத்தின் விதிகளை செயல்படுத்துவதற்காக, அவற்றை வசதியாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
நீர்வளத்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள முதன்மையான கல்வி நிறுவனங்களான ஐஐடி,என்ஐடி மற்றும் இதர மையங்கள் நீரியல் மதிப்பீடு, விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீடு, நில அதிர்வு பாதுகாப்பு மதிப்பீடு, அணை உடைப்பு பகுப்பாய்வு, கருவி தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட அணை பாதுகாப்புச் சேவைகளில் பணியாற்றவும், ஆராய்ச்சி செய்யவும் தயாராக இருக்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களிடம் இருந்து ஒத்துழைப்பைக் கோரியுள்ளன.
இவ்வாறு அணைகள் பாதுகாப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் திறனை மேம்படுத்தும் வகையில் நீர்வளத்துறை மைய உதவியை வழங்குகிறது. இது இந்திய அரசாங்கத்தின் “ஆத்ம நிர்பர் பாரத்” திட்டத்துக்கு சரியான உத்வேகத்தை அளிக்கும். அணை பாதுகாப்பு சேவைகளில் பணியாற்றவும், ஆராய்ச்சி செய்யவும் தயாராக இருக்கும் கல்வி நிறுவனங்கள் https://tinyurl.com/mrxatmyp என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை வரும் பிப். 15-க்குள் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.