Published : 06 Feb 2023 06:35 AM
Last Updated : 06 Feb 2023 06:35 AM

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக வேட்பாளர் தேர்வு என குற்றச்சாட்டு: அவைத் தலைவர் கடிதத்தை நிராகரித்த ஓபிஎஸ் தரப்பு

சென்னை: அதிமுக வேட்பாளரை தேர்வு செய்யும் முறை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நடைபெறுவதால், அது தொடர்பாக தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதத்தை நிராகரிப்பதாகவும், அது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் நேற்று கூட்டாக அறிவித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.

இதற்கிடையே, பழனிசாமி தரப்பில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தனது தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதில், இருதரப்பினரும் கலந்துபேசி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்தலைமையில் பொதுக்குழு மூலமாக வேட்பாளரை தேர்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். இதில் பன்னீர்செல்வம் தரப்புக்கு உடன்பாடுஇல்லை.

இது தொடர்பாக அவரதுஆதரவாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

ஏற்கெனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளராக பா.செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்மகன் உசேன் அளித்த வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாத கே.எஸ்.தென்னரசு பெயரை மட்டும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று கடிதத்தில் அறிவித்து இருக்கிறார்.

அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும்போது முன்கூட்டியே தமிழ்மகன் உசேன், ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால், அவர் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்று தெரிகிறது. இது நடுநிலை தவறிய செயல் மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும்.

வேறு யாரேனும் வேட்பாளராக போட்டியிடுவதென்றால், பொதுக்குழு உறுப்பினர்களை முன்மொழியவும், வழிமொழியவும், அவற்றை அத்தகைய வேட்பாளர் ஒப்புக்கொண்டு நிற்பதற்குமான எந்த படிவமும் தமிழ்மகன் உசேனால் உருவாக்கப்படவில்லை. எங்களுக்கு அனுப்பிய தபாலோடு இணைக்கவும் இல்லை. இதர வேட்பாளர்கள் போட்டியிடும் உரிமையை தமிழ்மகன் உசேன் பறிக்க எந்த அதிகாரமும் இல்லை. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.

முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் யாருக்கு அதிகமாக வாக்களிக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்து முடிவெடுக்காமல், ஒருவரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று அறிவித்து, அவரை ஆதரிக்கிறீர்களா, மறுக்கிறீர்களா என்று கேட்டு கடிதம் அனுப்பி இருந்தது வேட்பாளர் தேர்வு முறை ஆகாது. வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஒரு வேட்பாளரை அறிவித்து, அவருக்காக பொது வாக்கெடுப்பு நடத்துவது உச்ச நீதிமன்றமே எதிர்பார்க்காதது.

இத்தகைய செயல் மூலம்தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் என்ற பதவியை அறவே புறக்கணித்துவிட்டு, பழனிசாமி அணியின் முகவராக இயங்கி இருக்கிறார்.

பொதுத் தேர்தலில் எவ்வாறு தபால் வாக்கு முறை செயல்படுத்தப்படுகிறதோ, அதே முறையை தமிழ்மகன் உசேன் கடைபிடித்திருக்கலாம். மாறாக, வாக்குச் சீட்டுகளை பொதுக்குழு உறுப்பினர்களிடையே நேராக கொடுத்து, அவர்கள் கையெழுத்தை பெற்று, அப்படி கொடுத்தவர்களே, திரும்பப் பெற்றுக்கொண்டு அவைத் தலைவரிடம் ஒப்படைக்க வழிகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தங்கள் விருப்பம்போல் வாக்களிக்கும் உரிமையும், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்ற ரகசியத்தை காப்பாற்றும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளன.

நேரடியாக வாக்காளர்களைச் சந்தித்து வாக்குகளை பெறும் முறையில் ஆசை காட்டுவது, அச்சமூட்டுவதும் இடம்பெறும். அத்தகைய தேர்தல் முறை நேர்மையாக நடைபெறாது. நேர்மைக்கு மாறாக வாக்குகளை பெற்று பெரும்பான்மையை காட்டுவது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படும் சதிச் செயல். உச்ச நீதிமன்ற தீர்ப்பு நடுநிலையுடன் வழங்கப்பட்டு இருந்தாலும், தமிழ் மகன் உசேன் அதை செயல்படுத்திய முறை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான, நடுநிலை தவறி, ஒருசாராரின் கைப்பாவையாகவே அவர் இயங்கி இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

அதனால் வேட்பாளர் தேர்வுதொடர்பாக தமிழ்மகன் உசேன்அனுப்பிய கடிதத்தை புறக்கணிக்கிறோம். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x