

சென்னை: தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் வகையில் ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு ட்ரோன் தமிழக கடலோர காவல் படையில் விரைவில் இணைய உள்ளது.
தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 1,076 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள பகுதிகளில் சுழற்சி முறையில் தினமும் 24 மணி நேரமும் கடற்பகுதி முழுவதையும் கண்காணித்து வருகின்றனர்.
தமிழக கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் தீவிரவாதிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பல், சமூகவிரோதிகளை விரட்டிபிடிக்கும் வகையில் 12 டன் எடையுள்ள 12 வேகமான இடைமறிக்கும்படகுகள், 5 டன் எடையுள்ள 12 வேகமாக இடைமறிக்கும் படகுகள் தினமும் ரோந்து சுற்றி வருகின்றன.
மேலும், இந்த படகுகளில் தீவிரவாதிகளை சுட்டுப் பிடிக்கும் வகையில் இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல் கடலோர பாதுகாப்பு படை போலீஸாருக்கு இன்சாஸ் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிவிரைவு இடைமறி படகுகளை இயக்குவதற்கு கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் ஒப்பந்த அடிப்படையில் தொழில் நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, 18 தொழில்நுட்ப பணியாளர்கள் தற்போது பணியில் உள்ளனர். அடுத்தகட்டமாக தீவிரவாதிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் கும்பலை கண்காணிக்கும் பணியில் அதிநவீன ராட்சத உளவு ‘ட்ரோன்’ ஈடுபடுத்தப்பட உள்ளது. அதில், ரேடார் கருவியும் பொருத்தப்பட உள்ளது. இந்த ட்ரோனை வடிவமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த ட்ரோன் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தில் இணைக்கப்பட உள்ளதாக அப்பிரிவின் கூடுதல் டிஜிபி சந்திப் மித்தல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘`தமிழக கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலை உளவு பார்க்கும் வகையில் ராட்சத ட்ரோன் தயாராகிறது. இந்த ட்ரோன் 500 மீட்டர் உயரம்வரை செல்லக் கூடியது. இதுநமது உளவு பணிக்கு மேலும் வலு சேர்க்கும்'’ என்றார்.
கடலில் தத்தளித்த 60 பேர் மீட்பு: சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறக்கும் சம்பவம் அவ்வப்போது நடைபெறுகிறது. இதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படையினர் உள்பட பல பிரிவினர் அடங்கிய ‘உயிர் காக்கும் பிரிவு’ மெரினாவில் ஏற்படுத்தப்பட்டது.
இப்பிரிவினர் சென்னை மெரினா கடற்கரையில் 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடலில் தத்தளிப்பவர் எந்த பகுதியில், எவ்வளவு தூரத்தில், என்ன நிலையில் உள்ளார்கள் என்பதை கண்காணித்து மீட்க உதவியாக ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்தாண்டு மட்டும் 60 சுற்றுலா பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.