

‘இரு அணிகள் இணைப்பை தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தும் என்னையும், அமைச்சர் ஜெயக்குமாரையும் நீக்க வேண்டும் என எதற்காக மதுசூதனன் தரப்பு வலியுறுத்துகிறது எனத் தெரியவில்லை’ என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு வன உயர் பயிற்சியகத்தில், பயிற்சி நிறைவு பெற்ற 2015-2017-ம் ஆண்டு வனச்சரக அலுவலர் அணியினருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 28 அதிகாரிகளுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் அணியும், பாஜகவும் கூட்டணி வைத்தால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இருந்தாலும் இரு அணிகள் இணைப்புக்கான பணிகள் தொடந்து நடக்கின்றன. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவால் பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட நான், கட்சியின் சட்டப்படி கணக்கு பார்க்கும் பணிகளை பார்த்து வருகிறேன்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என தொடக்கத்தில் இருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன். யாரைப் பற்றியும் தவறாக பேசாதபோது, எதற்காக என்னையும், அமைச்சர் ஜெயக்குமாரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மதுசூதனன் தரப்பினர் கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பந்து இப்போது அவர்கள் கையில் இருக்கிறது. அதிமுகவில் 98 சதவீதம் பேர் ஒரே அணியாக இருக்கிறோம். 2 சதவீதத்துக்கும் குறைவாகவே ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் அரசின் செயல்பாடுகளையும், ஆட்சியையும் விமர்சனம் செய்வது போல அவர் பேசியிருப்பதற்கு, அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ள கருத்துதான் என்னுடைய கருத்தும். மாநிலத்தில் நடக்கும் கொலை, கொள்ளை, குற்றச் சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவற்றை காவல்துறை விசாரிக்கும். திமுக ஆட்சி அமைக்க ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்.
அதிகமாக யானைகள் உயிர்வாழ்வது தமிழகத்தில்தான். வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானைகள் அதிகமாக உயிரிழந்து வருகிறது என்பது தவறான தகவல். இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.