

இளவரசனின் மரணத்தை மறு புலனாய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தருமபுரியை அடுத்துள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், காதல் கலப்பு திருமண விவகாரத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஜூலை 4-ம் தேதி ரயில் தண்டவாளம் அருகே இறந்துகிடந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதால் மாவட்டம் முழுவதும் வருகிற 10-ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெள்ளிக் கிழமை கிருஷ்ணகிரி வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் இளவரசன் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பையொட்டி நத்தம் கிராமத்துக்கு செல்லும் முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிர்த்து உள்ளது.
அரசியல் கட்சியினர் எவரும் இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் அனுமதி கோராத நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து ஒரு தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது வேடிக்கையாக உள்ளது. இருப்பினும் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற அடிப்படையில் நத்தம் காலனிக்குச் செல்லும் முடிவை கைவிட்டுள்ளோம்.
நத்தம் காலனியைச் சேர்ந்த 7 அப்பாவி இளைஞர்கள் மீது ஆயுதம் மற்றும் வெடிபொருள்கள் வைத்திருந்ததாகக் காவல்துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக காவல்துறையினர் எடுத்த முடிவாகும். இது தமிழக அரசின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனோபாவத்தை காட்டுகிறது.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையைக் கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி அறவழியில் போராட்டம் நடத்த உள்ளோம். இளவரசனின் மரணத்தை மறுபுலனாய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
144 தடையுத்தரவை காரணம் காண்பித்து என்னை தருமபுரி மாவட்டத்துக்குள் செல்ல காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் அனுமதிக்க மறுத்து வருகின்றனர். விரைவில் உரிய அனுமதி பெற்று நத்தம் காலனி கிராமத்துக்குச் செல்வேன்.
தனித்துப் போட்டி?
திமுகவுடன் எந்த கருத்து வேறு பாடும் கிடையாது. தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது குறித்து களபணியாளர்களிடம் கருத்து அறிய தமிழகம் முழுவதும் பயணம் செய்ய உள்ளேன்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
இளவரசனுக்கு அஞ்சலி
பின்னர் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தமிழ்நாடு திருமண மண்டபத்தில் இளவரசனின் உருவப் படத்துக்கு திருமாவளவன் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தனிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், மாநில வணிகரணி துணைச் செயலாளர் கனியமுதன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவேந்தன், மாநில சீராய்வுக்குழு உறுப்பினர் தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.