

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை திரும்பப் பெறாவிட்டால், தேமுதிக சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்லத்துரையையும்,சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக துரைசாமியையும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. செல்லத்துரையை துணைவேந்தராக நியமனம் செய்த அறிவிப்பு, பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் மிகப் பெரிய ஒரு அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கொலை முயற்சி வழக்கு மற்றும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அவரை நியமனம் செய்ய ஆளுநர் ஆணை பிறப்பித்திருப்பதைப் பார்க்கும் போது, அந்த நேர்காணல் நடைமுறையிலும், அதை நடத்திய தமிழக பல்கலைக்கழகங்களின் நேர்மையையும் சந்தேகிக்கும் விதமாக மக்கள் பார்க்கிறார்கள்.
குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் அலுவலகப் பணிக்குக் கூட தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது, செல்லத்துரை நியமனம் செய்யப்பட்டதை தேமுதிக சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
பல்கலைக்கழக துணைவேந்தராக தேர்வு செய்யப்படுபவர் வழக்குப் பதிவு இல்லாதவராகவும், நேர்மையானவராகவும், ஊழல் அற்றவராகவும், மக்களிடம் நற்பெயரை பெற்றவராகவும் இருந்து, தகுதியுடைய ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். ஆனால் தகுதியே இல்லாதவரை பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரையை நியமனம் செய்ததை உடனடியாக திரும்பப் பெற்று, கல்வித்துறைக்கு நேர்மையான ஒருவரை தேர்வு செய்து, நியமனம் செய்யவேண்டும்.
செல்லத்துரை நியமனத்தை திரும்பப் பெறாவிட்டால், தேமுதிக சார்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முன்பு மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.