பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் நகர பாஜகவினர் அளித்துள்ள மனுவில், "தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக பொள்ளாச்சி உள்ளது.

இங்கிருந்து ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான மதிப்பில் தென்னை பொருட்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. வருவாய் கோட்டம், கல்வி மாவட்டம், நெடுஞ்சாலை உட்கோட்டம், மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதி என அனைத்துக்கும் தலைமையிடமாக பொள்ளாச்சி உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் திருப்பூர் இருந்தது. தற்போது, திருப்பூர் தனி மாவட்டமாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், நீண்ட காலமாக பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

நிர்வாக காரணங்களுக்காகவும், மாவட்டத் தலைநகருக்கும் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிக்கும் அதிக தூரம் உள்ளது. மலைப் பகுதியான வால்பாறை அருகே உள்ள சோலையாறு பகுதியிலிருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வர, சுமார் 260 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி, கிணத்துக் கடவு, வால்பாறை மற்றும் ஆனைமலை ஆகிய நான்கு வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், உடுமலை வட்டங்களை உள்ளடக்கி, பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொள்ளாச்சி மாவட்டத்தை உருவாக்க, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in