ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 16-வது வார்டு, வீரப்பன்சத்திரம் பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து,  மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 16-வது வார்டு, வீரப்பன்சத்திரம் பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.

விசைத்தறிகளுக்கு 1,000 யூனிட் இலவச மின்சாரம் விரைவில் அறிவிப்பு வரும் என அமைச்சர் தகவல்

Published on

ஈரோடு: விசைத் தறிகளுக்கான இலவச மின்சார அளவு 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தப்படும், என அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட, 16-வது வார்டு பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரின் கடந்த ஒன்றரை ஆண்டு கால சாதனைகளால், ஈரோடு கிழக்கு தொகுதியில் கை சின்னம் மாபெரும் வெற்றி பெறும்.

மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பது தவறான கருத்து. இது முதல்வர் ஸ்டாலின் கோட்டை. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் கூட நடத்த முடியாத நிலை இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

பாஜக என்பது ஒரு ‘மிஸ்டு கால் பார்ட்டி’. அவர்கள் கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அக்கட்சி தலைவரிடம் கேளுங்கள். பூத் கமிட்டிக்கு கூட பாஜகவில் ஆள் இல்லை. மின்சார கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

தற்போது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணி நடந்து வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்பு, விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்படாதது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

கடந்த 2010-ல் இருந்த மின்கட்டணத்தை விட, அதிமுக ஆட்சியில் கூடுதலாக 117 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. விசைத்தறிகளுக்கு அதிமுக ஆட்சியில் 120 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. விசைத் தறிகளுக்கு தற்போது வழங்கப்படும் 750 யூனிட் இலவச மின்சாரம், விரைவில் 1,000 யூனிட்டாக உயர்த்தப்படும், என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in