திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்கு பின்னர் ஆறுமுகசாமி, கைலாசநாதர் திருத்தேரோட்டம்

தைப்பூசத்தை முன்னிட்டு, திருசெங்கோடு சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்களின் வெள்ளத்தில் அசைந்து ஆடி வந்த ஆறுமுகசாமி திருத்தேர்.
தைப்பூசத்தை முன்னிட்டு, திருசெங்கோடு சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்களின் வெள்ளத்தில் அசைந்து ஆடி வந்த ஆறுமுகசாமி திருத்தேர்.
Updated on
1 min read

நாமக்கல்: திருச்செங்கோடு சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோயிலில் 51 ஆண்டுகளுக்கு பின்னர் விநாயகர், ஆறுமுகசாமி, கைலாசநாதர் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆறுமுகசாமி தனி சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தைப்பூசத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த 51 ஆண்டுகளாகத் தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்தாண்டு தைப்பூச தேர்த் திருவிழா ஜனவரி 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகசாமி தேவசேனா சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து, சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன.

வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், ஆட்சியர் ஸ்ரேயா சிங், ஈ.ஆர்.ஈஸ்ரவன் எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, திருத்தேர் ரத வீதிகள் வழியாகத் திரண்டிருந்த பக்தர்களுக்கு மத்தியில் ஊர்ந்து சென்று மீண்டும் நிலையை அடைந்தது.

தொடர்ந்து, மாலையில் கைலாசநாதர், சுகந்த குந்தலாம்பிகை, சோமாஸ்கந்தர் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில், திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் நளினி சுரேஷ் பாபு, கோட்டாட்சியர் கவுசல்யா, கோயில் உதவி ஆணையர் ரமணி காந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

51 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்த் திருவிழா என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி, நகரில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. திருச்செங்கோடு டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிற கோயில்களில்...: இதுபோல, நாமக்கல் கூலிப்பட்டி முருகன் கோயில், மோகனூர் காந்தமலை முருகன் கோயில், கபிலர்மலை முருகன் கோயிலிலும் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in