Published : 06 Feb 2023 06:55 AM
Last Updated : 06 Feb 2023 06:55 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1,081 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுந்தொலைவு பயணத்துக்கு பேருந்து, கார்களைவிட ரயில் போக்குவரத்து மிகவும் உகந்ததாக உள்ளது. கட்டணம் குறைவு, உடல் அசதியில்லாத பயணம் உட்பட பல காரணங்களால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
இதனால், ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அதன்படி, 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1,081 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டுக்கு ரூ.393.44 கோடியும், 2021-22-ம் நிதியாண்டில் ரூ.224.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம்,2023-24-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியே அதிகமாகும்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் 700-க்கும் மேற்பட்ட மெயில், விரைவு,சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் கடந்தஆண்டுஏப்ரல் முதல் டிசம்பர் வரை 52.80கோடி பேர் பயணம் செய்தனர். இதன்மூலம், ரூ.5,247கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கை உயர்வதால், பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது.
தெற்குரயில்வேயில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 23 நடைமேம்பாலங்கள் கட்டப்பட்டன.10 நடைமேடைகள் விரிவுப்படுத்தப்பட்டன. 24 நடைமேடைகள் உயர்மட்ட அளவில் எழுப்பப்பட்டன. இதுதவிர, பல்வேறு அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.இதுபோல, வரும் நிதியாண்டில் பயணிகள் வசதிகள் அதிகரிக்கப்படும் என அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT