Published : 17 May 2017 07:59 AM
Last Updated : 17 May 2017 07:59 AM

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டமேற்படிப்பு கலந்தாய்வு நாளை தொடக்கம்: ரூ.3 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக் கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது.

தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே பட்ட மேற்படிப்புகள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு (எம்டி, எம்எஸ்) 562 இடங்கள், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) 200 இடங்கள் இருக்கின்றன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு (எம்டிஎஸ்) 19 இடங்கள் உள்ளன.

இந்நிலையில் 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய மேற்படிப்பில் 722 இடங்களும், பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 17 இடங்களும் நிரப்பப் பட்டன. கலந்தாய்வு முடிவில் மருத்துவ பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய மேற்படிப்பில் 40 இடங்கள், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பில் 2 இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில் 8 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 18-ம் தேதி (நாளை) தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் செல்வராஜிடம் கேட்ட போது, “நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயிக்கவில்லை. அந்தந்த பல்கலைக் கழகங்களில் உள்ள கல்வி கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 22-ம் தேதி முதல் 23-ம் தேதி பகல் 11 மணி வரை நடக்கிறது. 23-ம் தேதி பகல் 2 மணிக்கு பிறகு தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 2 இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 40 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எட்வின் ஜோ கூறும்போது, “நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி மாநில அரசுக்கு 50 சதவீத இடங்களை கொடுக்கவில்லை. அவர்களும் நீதிமன்றம் சென்றுள்ளனர். அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் நாங்கள் 8 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்துகிறோம். 50 சதவீத இடங்களை மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வந்தால், இந்த கலந்தாய்வு ரத்து செய்யப்படும். மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x