

சென்னை: டெல்டா மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மற்றும் உளுந்து உள்ளிட்ட ஊடுபயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளன. ஏற்கெனவே வடகிழக்கு பருவமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகளும் உரிய பாதுகாப்புகள் இல்லாததால் மழையில் நனைந்து வீணாகி உள்ளது.இதனால் கடன் வாங்கி விவசாயம் பார்த்த விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தாமதமின்றி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.