

சென்னை: தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்ற 81 வயது முன்னாள் ராணுவ வீரர், தான் மறைந்த பிறகு, தனது சொத்துகளை இந்திய ராணுவத்துக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபேதார் மேஜர் மற்றும் கவுரவ கேப்டன் எஸ்.இருதயசாமி(81). இந்திய ராணுவம் மீது கொண்ட ஈர்ப்பால் 18 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார்.
சீன-இந்தியா போர் (1962), இந்திய-பாகிஸ்தான் போர்களில் (1965) பங்கேற்ற இருதயசாமி, 1971-ல் வங்கதேச விடுதலைக்காக நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரின்போது ஹவில்தாராகப் பங்கேற்றார்.
ராணுவத்தில் 32 ஆண்டுகள் சேவைபுரிந்த கேப்டன் இருதயசாமி, 1992-ல் ஓய்வு பெற்றார். பின்னர், திருச்சியில் தான் குடியிருந்த பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக 1996-ல் ரங்கநாதன் குடியிருப்போர் நலச் சங்கத்தை தொடங்கினார். சங்கத்தின் தலைவராக சுமார்18 ஆண்டுகள் பொறுப்புவகித்த அவர், அப்பகுதியின் அத்தியாவசிய வசதிகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
தேசிய போட்டியில் வெற்றி: சிறு வயது முதல் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட இருதயசாமி, 2014 முதல் முதியோர்களுக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்றார். 2020-ல் தேசிய அளவில்மணிப்பூரில் நடைபெற்ற முதியோர் தடகளப் போட்டியில் வெற்றிபெற்றார். மேலும், சர்வதேச அளவில் நடைபெறும் முதியோர் தடகளப் போட்டியிலும் பங்கேற்க முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆண்டுஅக்டோபர் மாதம் தென்பிராந்திய ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் ஏ.அருணுக்கு அனுப்பிய கடிதத்தில், தஎனது வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள ரூ.10 லட்சத்தை ராணுவத்துக்கு நன்கொடையாக அளிப்பதாகவும், தானும், தனதுமனைவியும் மறைந்த பின்னர், தங்களது வீடு மற்றும் சொத்துகளை இந்திய ராணுவத்துக்கே கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இருதயசாமி கூறியதாவது: இந்திய ராணுவம் எனக்கு செய்த உதவிக்கு, திருப்பிச் செலுத்தும் நன்றிக் கடனாகவே இதைப் பார்க்கிறேன். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. எனவே,எனது சொத்துகளை இந்திய ராணுவத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். மேலும், எனது சேமிப்புத் தொகையை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் குழந்தைகளின் கல்விக்கும், முதியோர் நலனுக்கும் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த முடிவை நானும், என் மனைவியும் சேர்ந்துதான் எடுத்தோம்.
இளைஞர்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது. விளையாட்டில் கவனம்செலுத்த வேண்டும். ராணுவத்தில் சேர்ந்து, நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.