Published : 06 Feb 2023 07:16 AM
Last Updated : 06 Feb 2023 07:16 AM
சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சைமுறைகளை அறிந்துகொள்வதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் 5 நாள் பயணமாக ஜப்பானுக்கு இன்று செல்கின்றனர்.
இதுதொடர்பாக நேற்று சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலக அளவில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் பேர்புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுவதுமாக குணப்படுத்திவிடலாமென மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் முன்னோடி நாடாக ஜப்பான் உள்ளது. ஜப்பானில் புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள், சிகிச்சை முறைகள் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது.
5 நாள் பயணம்: ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவுமுகமை கேட்டுக் கொண்டதால், தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி ஜப்பான் நாட்டின் புற்றுநோய் கொள்கை, ஆராய்ச்சி,சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை அறிந்துகொள்வதற்காக நான் (மா.சுப்பிரமணியன்), செயலாளர் ப.செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், புற்றுநோய் நிபுணர்கள் அடங்கிய குழு 5 நாள் பயணமாக நாளை (இன்று) அதிகாலை ஜப்பான் செல்கிறோம்.
மத்திய அரசின் பிரதிநிதிகளும் வருகின்றனர். எதிர்காலத்தில் தமிழக மருத்துவர்களை ஜப்பானுக்கு அனுப்பி சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ள செய்வதற்கு இந்த பயணம் உதவியாக இருக்கும்.
ஏற்கெனவே ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. மதுரை, கீழ்ப்பாக்கம், கோவை மருத்துவக் கல்லூரிகளில் புதிய மருத்துவமனைகளை கட்டுவது உட்பட சுகாதாரத் துறைக்கு ரூ.1,387.88 கோடி கடன் அளித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ்: கடந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 50 மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டும் 50 மாணவர்களுக்கான சேர்க்கை முடிந்துள்ளது. இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT