ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளையா? - கேரள சாமியாரிடம் 24 மணி நேரம் தீவிர விசாரணை

ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளையா? - கேரள சாமியாரிடம் 24 மணி நேரம் தீவிர விசாரணை
Updated on
2 min read

கோடநாடு காவலாளி கொலை வழக் கில் கேரளாவைச் சேர்ந்த சாமியார் சிக்கியுள்ளார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கனகராஜ், சேலம் அருகே நடந்த விபத்தில் பலியானார். மற்றொரு நபரான ஷயான், அதே நாளில் கேரள எல்லையில் நடந்த விபத்தில் சிக்கி கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்தோஷ் சமி, தீபு, சதீசன், உதயகுமார், பிஜித் ஜாய், ஜம்சீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமீஷ், அனூப் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மனோஜ் (41) என்ற சாமியார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவரை 3-வது குற்றவாளியாக சேர்த்துள் ளனர். கோடநாடுக்கு நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள மர வியா பாரிக்கு இவர் மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது. மனோஜிடம் தனிப்பிரிவு போலீஸார் 24 மணி நேர விசாரணை நடத்தினர். பின்னர், அவரை நேற்று காலை கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களில் கனகராஜை தவிர மற்ற அனைவரும் கேரளா வைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா கூறும் போது, ‘‘எஸ்டேட்டில் சிசிடிவி கேமராக் களோ, நாய்களோ இல்லை என்பதை கொள்ளையர்கள் அறிந்திருந்தனர்’’ என்றார்.

திட்டம் வகுத்த மர வியாபாரி

பாதுகாப்பு குறைபாடு குறித்து எஸ்டேட்டை நன்கு அறிந்தவர்களுக்குத் தான் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. எஸ்டேட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மர வியாபாரி, கொலை நடந்த முதல் நாள் துபாய் சென்றுள்ளார். இதனால், கொள்ளைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து தனது சொந்த மாநிலத்தில் இருந்து கூலிப்படையை இவர் அமர்த்தி யிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர், வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், அம்மாநிலத்தில் ஹவாலா பணப் பரிவர்த்தனை அதிகம். இந்நிலையில், எஸ்டேட்டில் கொள்ளை அடித்தவுடன் ஹவாலா தரகர்கள் மூலம் பணத்தை உடனடியாக மாற்றவும், வளைகுடா நாடுளுக்கு எளிதாக தப்பிச் செல்லவும் முடியும் என்பதால், அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம்’’ என்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வெளிப்படையாக ஏதும் கூறாமல், ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கம், உயில் மற்றும் ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொள்ளை நடந்த அன்றே குற்ற வாளிகள் சென்ற வாகனத்தை கூடலூரில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். தீபு என்பவரின் கையில் ரத்தம் கசிந்திருந்ததை பார்த்து விசாரித்துள்ளனர். அதற்கு மழுப்பலாக பதில் சொன்னவர்கள், காரை சோதனையிட்ட போலீஸாருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

கேரள போலீஸ் விசாரணை

கோவை ஜிகேஎன்எம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் ஷயான், நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்த கேரள போலீஸார் கடந்த 2 நாட்களாக முயற்சித்தனர். ஆனால், உள்ளூர் போலீஸார் அனுமதி இல்லாததால் மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வந்தது. இந்நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி அனுமதி அளித்ததன்பேரில் ஷயானிடம் கேரள போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். ஷயானின் உடல்நிலை தேறியவுடன் ஒரு வாரம் கழித்து, மீண்டும் விசாரிக்கப்படும் என கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தூக்கமின்மையால் விபத்து

ஏப்ரல் 28-ம் தேதி பழநி முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 7 மணிக்கு பொள்ளாச்சிக்கு வந்த தாகவும், சரியான தூக்கம் இல்லாததால் வரும் வழியிலேயே காரை நிறுத்தி தூங்கியதாகவும், மறுநாள் அதிகாலை காரில் திருச்சூர் செல்லும்போது தூக்கமின்மை காரணமாகவே விபத்து நடந்ததாகவும் கேரள போலீஸாரிடம் ஷயான் தெரிவித் ததாக கூறப்படுகிறது. விபத்து தவிர எஸ்டேட் கொலை, கொள்ளை குறித்து விசாரிக்கக் கூடாது என கேரள போலீ ஸாருக்கு தமிழக போலீஸார் அறிவுறுத் தியதாக கூறப்படு கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in