Published : 01 Jul 2014 10:46 AM
Last Updated : 01 Jul 2014 10:46 AM

மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது புதிய அரசின் கடமை: ராமதாஸ்

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் விலைவாசி குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை நிறைவேற்ற வேண்டியது புதிய அரசின் கடமை. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இராக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை காரணம் காட்டி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 பைசாவும், டீசல் விலை 50 பைசாவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. உள்ளூர் வரிகளையும் சேர்த்தால் டீசல் விலை லிட்டருக்கு 58 பைசாவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.17 பைசாவும் உயர்ந்துள்ளது.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டத்தின்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டீசல் விலை மாதத்துக்கு 50 பைசா வீதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 17 தவணைகளில் மொத்தம் ரூ.11.57 பைசா டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதனால் சரக்குந்து உள்ளிட்ட ஊர்திகளின் வாடகைக் கட்டணமும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே உயர்ந்துள்ளன. அதுமட்டுமின்றி, தொடர்வண்டிக் கட்டணம், சர்க்கரை விலை ஆகியவற்றை மத்திய அரசு ஏற்கனவே உயர்த்தியிருப்பதால் மக்கள் பெரும் பொருளாதார சுமையை சுமந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இவ்விலை உயர்வு சாதாரண மக்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் விலைவாசி குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை நிறைவேற்ற வேண்டியது புதிய அரசின் கடமை ஆகும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்க வகை செய்யும் விலை நிர்ணயக் கொள்கையையும் ரத்து செய்ய வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x