

தமிழகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 15 ஆண்டுகளாக சுமார் 2,600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எய்ட்ஸ் குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். இவர்கள் அரசின் நேரடி ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ சம்பந்தமான பிற பணிகளையும் செய்து வருகிறார்கள்.
எய்ட்ஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாக்குவதும், பரிசோதனை மற்றும் சிகிச்சை கொடுப்பதும் இவர்களது பணி.
கோரிக்கைகள் முன் வைத்த எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள் மீது எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட அலுவலகம் நடவடிக்கை எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது.
கடந்த மார்ச் 31-ல் - 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த 11 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, அதன் பிறகு இடைப்பட்ட காலத்தில் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் என 10 பேரை பணி நீக்கம் செய்தது, பிறகு மார்ச் 2017-ல் 14 பேரை பணி நீக்கம் செய்தது ஆகியவற்றை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும், குழுக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அமைப்பு ஊழியர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே சென்னை மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.