திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ பொறுப்பேற்பு: பயிர் சேதம் குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக பேட்டி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ
Updated on
1 min read

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள சாருஸ்ரீ பயிர் சேதம் குறித்து விவசாயிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தின் 35வது ஆட்சியராக சாருஸ்ரீ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் பேசிய அவர், ''கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதத்தை உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தியபிறகு பயிர் சேதம் கணக்கெடுப்பு நடத்தி, தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

திருவாரூரை மாநகராட்சியாக உயர்த்துவது குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறத்தில் 100 நாள் வேலை திட்டம் உள்ளது போல் நகர்ப்புறத்திலும் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் உணவு பூங்கா உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு அரசு திட்டங்கள் விரைவாக சென்றடையவும், மக்கள் பிரச்சினைகள் குறித்து உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

திருவாரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள சாருஸ்ரீ, ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் உதவி ஆட்சியராகவும், வணிகவரித்துறையில் சென்னையில் உதவி ஆணையராகவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in