Published : 05 Feb 2023 03:57 AM
Last Updated : 05 Feb 2023 03:57 AM

இபிஎஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் - பன்னீர்செல்வத்திடம் அண்ணாமலை வேண்டுகோள்

அண்ணாமலை

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டுக் கொண்டதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்கிறோம். திமுகவின் அசுர பலத்தை எதிர்கொள்ளும் வேட்பாளரை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பலமுறை பேசியுள்ளோம்.

இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதால்தான், பாஜக தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்கள் நலன் கருதி, பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வத்திடம் வேண்டுகோள் முன்வைத்தோம். அவர் சில நிபந்தனைகளை விதித்ததுடன், காலஅவகாசமும் கேட்டிருந்தார்.

ஒரு வலிமையான வேட்பாளர் பின்னால் அணிவகுத்து நின்று,அதிமுக வெற்றி பெற வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே, பாஜக இந்த தேர்தலில் போட்டியிடாது என்று கூறிவிட்டோம்.

அதேநேரத்தில், கூட்டணிக் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் உறுதியான நிலைப்பாடு. அதிமுக அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றகருத்தை நாங்கள் முன்வைக்கவில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆதரவு கொடுக்க வேண்டுமானால், சில விஷயங்களை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம். மேலும், கட்சி சின்னமின்றி, வேறு சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தினால், ஆதரவு அளிக்க முடியாது என்றும் தெரிவித்தோம்.

இரு தரப்பினரிடையே சண்டையை மூட்டி, பிரச்சினையை உருவாக்கி, அதில் குளிர்காய்வது பாஜகவின் நோக்கமல்ல. பிறகட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி, சொந்தக் கட்சியை வளர்க்க நினைத்தால் அது நிலைக்காது. எங்கள் பலத்தில் வளர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

அதிமுக உட்கட்சிப் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். கட்சித் தொண்டர்கள் யாரை தலைவர் என்றுகூறுகின்றனரோ, பாஜக தலைவர்கள் அவர்களுடன் பேசுவார்கள். ஒரு தேசியக் கட்சியாக, பல பிரச்சினைக்குரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால், உட்கட்சிப் பிரச்சினையில் நடுநிலையுடன்தான் நடந்திருக்கிறோம். அப்போதுதான் மக்களுக்கும் நம்பிக்கை வரும்.

பேச்சுவார்த்தையின்போது நடந்ததை அறியாமல், 2, 3-ம் கட்டத் தலைவர்கள் ட்வீட் போட்டு விடுகின்றனர். பாஜகவில் அவ்வாறு ட்வீட் போட்ட நிர்வாகிகளிடம், இதுபோன்று செயல்படவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளேன். நமக்கு அனைத்து தலைவர்களும் வேண்டும். ஆனால், வெற்றி வேட்பாளர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும்.

எனக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கு நிச்சயம் பாஜக வெற்றி பெறும்.

நான் திட்டமிட்டுள்ள பாத யாத்திரையையும் மேற்கொள்ள வேண்டும். கூட்டணிக் கட்சி வேட்பாளர் வெற்றிக்காகவும் உழைக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x