Published : 05 Feb 2023 04:06 AM
Last Updated : 05 Feb 2023 04:06 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக போட்டியிடும் வாய்ப்பு - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு குறித்து அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினார். வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர். படம்: ம.பிரபு

சென்னை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், சென்னையில் நேற்று தனது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோருடன் நேற்று ஆலோசனை மேற்கொண்ட பன்னீர்செல்வம், பின்னர் விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பாக, பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:

இடைத்தேர்தலில் அதிமுக ஒற்றுமையாகப் போட்டியிட வேண்டும், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திடத் தயார் என்று நான் அறிவித்தேன். அதற்கேற்ப, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாகப் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இரட்டை இலை சின்னத்தின் மூலம் அதிமுக போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

ஒருங்கிணைப்பாளரான நான் கட்சியிலேயே இல்லை என்று பழனிசாமி தரப்பினர் பகை உணர்வுடன் கூறி வந்தனர். ஆனால், எங்களது தரப்பைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கி, எங்கள் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர்தான், பொதுக்குழு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, எங்களை எதிர்த்தவர்களுக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர் என்றபொறுப்பு நீடிக்க தடை விதிக்கப்படவில்லை. அதேநேரத்தில், இடைக்கால பொதுச் செயலாளர்என்ற பொறுப்பை உச்ச நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ அங்கீகரிக்கவில்லை.

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற, நானும், என் மீது பற்றுகொண்ட அதிமுகவினரும் பாடுபடுவோம். இவ்வாறு அறிக்கையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

பின்னர், பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு தொடர்பாக இதுவரை எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. பொதுக்குழு முடிவுக்குப் பிறகே அதிமுக வேட்பாளர் யார் என்பது தெரியம்.

பொதுவாக இதுபோன்ற தீர்ப்புகளில் ஆணையர் ஒருவர் நியமிக்கப்படுவார். ஆணையருக்குப் பதிலாக தமிழ்மகன் உசேனை நியமித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை. இரு தரப்புக்கும் பொதுவான ஒருவரை பொதுக்குழு தேர்வு செய்தால், அவரை நாங்கள் ஆதரிப்போம்.

எனினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டும்தான். ஏற்கெனவே நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சிலர் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் தமிழ்மகன் உசேனை தேர்தல் ஆணையராக நியமித்துள்ளது. அவர் இரு தரப்பினரிடமும் பேசி, பொதுவான வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் இடம்பெறவில்லை.

அதிமுகவுக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் தன்னால் இடையூறு வந்து விடக்கூடாது. அதன் மூலம் திமுக பயனடைந்து விடக்கூடாது என்பதற்காக, கனத்த இதயத்துடன் பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்கும் சூழல் பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர் செந்தில் முருகனை திரும்பப் பெற முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்லம் தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகனை கட்சி அமைப்பு செயலாளராக நியமித்து உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x