Published : 05 Feb 2023 04:12 AM
Last Updated : 05 Feb 2023 04:12 AM

அதிமுக வேட்பாளர் தேர்வு | பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை - பூர்த்தி செய்து இன்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை: இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரைத் தேர்வு செய்யும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை இன்று இரவுக்குள் பூர்த்தி செய்து அனுப்புமாறு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளாகப் பிரிந்துசெயல்படுகின்றனர். இதற்கிடையே ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிட பழனிசாமி தரப்பில் தென்னரசு, பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதேநேரம் தேர்தல் ஆணையத்தில் தற்போதுள்ள ஆவணங்களின்படி, அதிமுக வேட்பாளரின் வேட்பு மனுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் கையெழுத்து இடம்பெற வேண்டும்.

ஏற்கெனவே கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமியை முன்மொழிந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எனவே, இரட்டை இலை சின்னம்மற்றும் அதிமுக வேட்பாளரின் அங்கீகாரம் தொடர்பாக, வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியின் கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்ய, ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவை இபிஎஸ் தரப்பு கூட்டி, பொதுக்குழு உறுப்பினர்களிடம் சுற்றறிக்கையின் அடிப்படையில் வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவின்படி, அதிமுக வேட்பாளர் யார் என்பதை தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் அனுப்பி வைக்க வேண்டும்’’ என கூறியிருந்தது.

அதன் அடிப்படையில், 2,539 பொதுக்குழு உறுப்பினர்கள், 70 மாவட்டச் செயலாளர்கள், 255 சார்பு அணிச் செயலாளர்கள், 61 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

மின்னஞ்சல், ஃபேக்ஸ் போன்றவழிகளில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், தென்னரசை ஆதரிக்க மற்றும் நிராகரிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதோடு, பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பத்துக்கேற்ப மாற்று வேட்பாளர்களின் பெயரை பரிந்துரை செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையை முறையாகப் பூர்த்தி செய்து, அதனை இன்று (பிப்.5) இரவு 7 மணிக்குள் சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகத்தில் தன்னிடம் சேர்க்குமாறு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் பூர்த்தி செய்யப்பட்டு கிடைக்கப்பெறும் சுற்றறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஓபிஎஸ் தரப்புக்கும் சுற்றறிக்கை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை, வாட்ஸ் ஆப் மூலமாகவும் நேரடியாகவும் பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டதாக அதிமுக தலைமை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

படிவத்தில் கையெழுத்து: அவைத் தலைவருக்கு அதிகாரம்: இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவைத் தலைவருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேட்பாளர் தேர்வு தொடர்பாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பொதுக்குழு அங்கீகரிக்கிறது. இந்த வேட்பாளரை கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரியப்படுத்த ஒப்புதல் அளிக்கிறது.

மேலும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான படிவம் ஏ, பி உள்ளிட்ட விண்ணப்பங்களில் கையொப்பம் இடும் அதிகாரம் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x