Published : 05 Feb 2023 03:43 AM
Last Updated : 05 Feb 2023 03:43 AM

தொழிலதிபர் வழங்கவிருந்த இலவச வேட்டி, சேலைக்கு டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு - நெரிசலில் 4 மூதாட்டிகள் உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தொழிலதிபர் வழங்கவிருந்த இலவச வேட்டி, சேலைக்கு டோக்கன் பெறுவதற்காக திரண்ட கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய 4 மூதாட்டிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஐயப்பன். இவர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் ஐயப்பன் ப்ளூ மெட்டல் (ஜல்லி கற்கள்) தொழில் செய்து வருகிறார். இவர் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறார். இதை வாங்க ஏராளமானோர் வருவதால், டோக்கன் வழங்கிய பிறகு, வேட்டி, சேலையை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், வாணியம்பாடி ஜின்னா மேம்பாலம் அருகே உள்ள இவரது அலுவலக வளாகத்தில் இலவச வேட்டி, சேலைக்கு நேற்று டோக்கன் வழங்குவதாக தகவல் கிடைத்து, 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 3 மணி அளவில் அங்கு திரண்டனர். அதிக கூட்டம் இருந்ததால் டோக்கன் பெறுவதில் பெண்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினர். அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, வாணியம்பாடி நகர காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வட்டாட்சியர் சம்பத் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர். டோக்கன்பெற வந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், மூதாட்டிகள் என தெரியவந்தது.

இதற்கிடையே, நெரிசலில் சிக்கி மயங்கியதால் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வள்ளிப்பட்டு வள்ளியம்மாள் (60), ஈச்சம்பட்டு நாகம்மாள் (60), தும்பேரி ராஜாத்தி (62),பழைய வாணியம்பாடி மல்லிகா (75)ஆகிய 4 பேரும் மூச்சுத் திணறலால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டோக்கன் வழங்குவது தொடர்பாக தொழிலதிபர் ஐயப்பன், முறையாக அனுமதி எதுவும் பெறவில்லை என்று வட்டாட்சியர் சம்பத் கூறினார். ஆனால், பிப்.4-ம் தேதி டோக்கனும், 5-ம் தேதி வேட்டி, சேலையும் வழங்க உள்ளதால், பாதுகாப்பு அளிக்குமாறு வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் கடந்த 30-ம் தேதி மனு கொடுத்ததாகவும், காவல் துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் ஐயப்பன் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் துறைஉயர் அதிகாரிகள் தரப்பில்விசாரித்தபோது, ‘‘ஐயப்பன் கோரியதன் பேரில்,பாதுகாப்பு ஏற்பாடுகளை வாணியம்பாடி போலீஸார் செய்துள்ளனர். பிப்.4-ம் தேதிகாலை ஒரு சிலருக்கு மட்டும் அவரது அலுவலகத்தில் டோக்கன் வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவல் பரவி, கூட்டம் அதிகமாக திரண்டதால், டோக்கன் வழங்கிய அலுவலக வளாகத்தின் கேட்டை பூட்டிவிட்டனர். அங்கு போதிய ஆட்கள் இல்லாததால் கூட்டத்தைகட்டுப்படுத்த முடியவில்லை’’ என்றனர். தொழிலதிபர் ஐயப்பனை போலீஸார் கைது செய்தனர். வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதில், சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.2 லட்சம் நிவாரண நிதி: இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின்வெளியிட்ட அறிவிப்பில், ‘வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர்நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்துக்கு காரணமான ஐயப்பன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்து உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x