Published : 05 Feb 2023 03:48 AM
Last Updated : 05 Feb 2023 03:48 AM

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதத்தை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பிவைப்பு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திடீர் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களாக தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பது குறித்து அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

பருவம் தவறி பெய்த திடீர் கனமழை தற்போது குறைந்து வருகிறது. மேலும், நீரை வடியவைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக வருவாய் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் ஏற்கெனவே களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முதல்நிலை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், இதை நேரடியாக ஆய்வு செய்வதற்காக வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் வேளாண் துறை செயலர், இயக்குநர் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகளும் இந்த கள ஆய்வை மேற்கொண்டு, விவசாயிகளை சந்தித்துப் பேசி,விவரங்களை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வரும் பிப்.6-ம் தேதி (நாளை) இந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை சந்தித்து சேத விவரங்களை கேட்டறிந்து, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகை பெற்றுத் தருவது குறித்தும், இழப்பீடு வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x